பொங்கல் கரும்பு கொள்முதல் செய்ய கலெக்டர் ஆலோசனை
விழுப்புரம்: பொங்கல் திருநாளை யொட்டி, ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் வகையில் கரும்பு கொள்முதல் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் மனோகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திர சேகர், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் 6,19,756 ரேஷன் கார்டுதாரர்கள், இலங்கை தமிழர் முகாம்களில் வசிப் போர் உட்பட மொத்தம் 6,20,191 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது.இந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான முழுநீள கரும்பு வழங்க கொள்முதல் செய்வது பற்றியும், கூட்டுறவு, வேளாண்மை, மாவட்ட வழங்கல் துறை சார்ந்த அலுவலர்களோடு கலந்தாலோசனை செய்யப்பட்டது.தொடர்ந்து, கலெக்டர் பழனி, கூறியதாவது:ரேஷன் கார்டுதாரர்கள் வரும் 9ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு பெற சுழற்சி முறையில் விநியோகம் செய்ய ரேஷன் கார்டுகள் பிரிக்கப்பட்டு, கணக்கிட்டு தெருவாரியாக பராமரிக்கப்பட வேண்டும்.இதன் அடிப்படையில், அட்டைதாரர் பரிசு தொகுப்பு பெற வேண்டிய நாள், நேரம் குறிப்பிட்டு டோக்கன்களை விற்பனை யாளர்கள் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கிட வேண்டும்.இன்று (3 ம் தேதி) முதல் காலை 100 பேருக்கும், மதியம் 100 பேருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏதுவாக டோக்கன்கள் வழங்க வேண்டும். இடவசதியை பொறுத்து, 2ம் நாள் முதல் தினந்தோறும் காலை 150 முதல் 200 பேர் வரையும், மதியம் 150 முதல் 200 பேர் வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏதுவாக டோக்கனங்கள் வழங்கப்பட வேண்டும். பொங்கலுக்கு முன் இதற்கான பரிசு தொகுப்பு விநியோகம் நிறைவடையும் வகையில் டோக்கன்களில் தேதி குறிப்பிட்டு வழங்கப்பட வேண்டும் என அலுவலர்களிடம், தெரிவித்தார்.