முதல்வர் பங்கேற்கும் அரசு விழா முன்னேற்பாடுகளை கலெக்டர் ஆய்வு
விழுப்புரம்: விழுப்புரத்தில், முதல்வர் பங்கேற்க உள்ள விழா மேடை பணியை, கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.விழுப்புரம் மாவட்டத்தில், வரும் 27, 28 தேதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில், வரும் 27 ம் தேதி மாலை நடைபெறும் தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் தலைவரான முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். அன்று இரவு விழுப்புரத்தில் தங்குகிறார். மறுநாள் காலை 9:00 மணிக்கு விழுப்புரம் வழுதரெட்டியில், அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி நினைவு அரங்கம், சமூக நீதி போராளிகளின் மணி மண்டபத்தை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார். தொடர்ந்து நடைபெறும் விழாவில், பல்வேறு துறைகள் சார்பில், பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.இதையொட்டி, வழுதரெட்டியில் அரசு நிகழ்ச்சிக்கான விழா மேடை அமைக்கும் பணியை, கலெக்டர் பழனி நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி நினைவு அரங்கம், 21 சமூக நீதி போராளிகளின் மணி மண்டபம் மற்றும் நினைவு அரங்க வளாகத்தில் உள்ள நுாலகத்தை பார்வையிட்டார்.ஆய்வின்போது, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மணிமாறன் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.