| ADDED : பிப் 09, 2024 11:18 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் நேற்று நடந்த காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வில் 262 பேர் தேர்ச்சி பெற்றனர்.தமிழகத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 3,359 இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த டிசம்பர் 10ம் தேதி நடந்தது. இதில், தேர்ச்சி பெற்ற 827 பேருக்கு உடல் தகுதி தேர்வு, விழுப்புரம் ஆயுதப்படை மைதானத்தில், கடந்த பிப்ரவரி 6ம் தேதி முதல் நடந்து வருகிறது. அதன்படி, நேற்று காலை 408 பேருக்கு உடல் தகுதி தேர்வு நடந்தது.முதலில் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பும், பிறகு உடல் தகுதி தேர்வாக உயரம், மார்பளவு சோதனையும், 1,500 மீட்டர் ஓட்ட தேர்வும் நடந்தது.இந்த தேர்வு பணிகளை டி.ஐ.ஜி., திஷா மித்தல், எஸ்.பி., தீபக் சிவாச் ஆகியோர் பார்வையிட்டனர். தேர்வில் சான்றிதழ் சரி பார்ப்பில் 3 பேரும், உடல் தகுதியில் 11 பேரும், 1,500 மீட்டர் ஓட்டத்தில் 52 பேரும் வெளியேற்றப்பட்டனர். நிறைவாக 262 பேர் தேர்ச்சி பெற்றனர். உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, உடல் திறன் தேர்வு இன்று 10ம் தேதி நடக்கிறது.