உள்ளூர் செய்திகள்

கிரைம் செய்திகள்...

பெண்ணிடம் தகராறு: ஒருவர் கைது

மூங்கில்துறைப்பட்டு அடுத்த மல்லாபுரத்தைச் சேர்ந்தவர் சலாம் மனைவி ஷான்மா, 35; இவர் நேற்று மல்லாபுரம் சாலையில் நடந்து சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மாசிலாமணி, 43 ,என்பவர் அவரிடம் தகராறு செய்து கையை பிடித்து இழுத்தார். இது குறித்து ஷான்மா அளித்த புகாரின் பேரில், மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து மாசிலாமணியை கைது செய்தனர்.

கார் மோதி மூதாட்டி பலி

பெரம்பலூர் மாவட்டம், வீரகனுாரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சுரேஷ், 29; இவர், நேற்று தனது மனைவி அனிதா, 25; மாமியார் வெண்ணிலா, 60; ஆகியோருடன் பைக்கில் நேற்று சின்னசேலம் சென்றவர், மாலை 4.30 மணியளவில் சின்னசேலம் பைபாசில் மூங்கில்பாடி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் சுரேஷ் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில், 3 பேரும் படுகாயமடைந்தனர். உடன், சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் வெண்ணிலா இறந்தார். சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

ஒருவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

விழுப்புரம், எருமனந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 52; இவர், கடந்த 24ம் தேதி அதே பகுதியில் நடந்து சென்ற போது, அங்கிருந்த அய்யனார் மனைவி உண்ணாமலை, 57; மகன் பிரபு, 29; உறவினர் ஆறுமுகம், 62; ஆகியோர் பன்றி காணவில்லை என வெங்கடேசனிடம் கேட்டு திட்டி, தாக்கினர். புகாரின் பேரில், உண்ணாமலை உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

மணல் கடத்தல்: மாட்டு வண்டிகள் பறிமுதல்

திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் மாரங்கியூர் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மணல் கடத்தி வந்த சிலர், மாட்டு வண்டிகளை நிறுத்தி விட்டு தப்பியோடினர். போலீசார் 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

இருதரப்பு மோதல்: 12 பேர் மீது வழக்கு

விழுப்புரம் அடுத்த தளவானுாரைச் சேர்ந்தவர் அன்பரசு மனைவி மகாலட்சுமி, 42; அதே பகுதியைச் சேர்ந்த குணபூஷனம், 60; உறவினர்கள். இரு தரப்பினரும் சேர்ந்து ஊரில் புறம்போக்கு இடத்தில் மாரியம்மன் கோவில் கட்ட ஏற்பாடு செய்தனர். அந்த இடத்தில் மகாலட்சுமி தரப்பினரின் 100 சதுர அடி இடம் சேர்ந்து வருதால், மறுப்பு தெரிவித்தனர். இதனால், தகராறு ஏற்பட்டு திட்டி, தாக்கிக்கொண்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், குணபூஷணம், நாராயணன் உட்பட இருதரப்பைச் சேர்ந்த 12 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

விளையாட்டில் தகராறு: 4 பேர் மீது வழக்கு

விழுப்புரம், சேவியர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல் மகன் ஷியாம், 23; இவர், தனது தம்பி தேவா, 22; உறவினர் மகன் எழில், 23; ஆகியோருடன் இரு தினங்களுக்கு முன் கிரிக்கெட் விளையாடினர். அப்போது அங்கு வந்த சேவியர், ஸ்ரீபன், 25; ஜெபஸ்டின், 25; ஆகியோர், ஷியாம் தரப்பினரை கேலி செய்து, திட்டினர். இதனால், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீபன், ஜெபஸ்டின், ஷியாம், தேவா ஆகியோர் மீது விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கணவர் மாயம்: மனைவி புகார்

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி. புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 45; கூலித் தொழிலாளி. இவர் கடந்த 21ம் தேதி மதியம் வேலைக்கு வந்தவாசி செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது மனைவி சக்தி அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பன்றி திருட்டு: 2 பேர் கைது

விழுப்புரம் அடுத்த பானாம்பட்டைச் சேர்ந்தவர் அய்யனார், 35; இவர், ராகவன்பேட்டையில் பட்டியில் பன்றிகள் அடைத்து வைத்திருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, சரக்கு வேனில் வந்த 2 பேர் 25 பன்றிகளை திருடிக்கொண்டு செல்ல முயன்றனர். உடன், அய்யனார் மற்றும் பொதுமக்கள் அவர்கள் இருவரையும் பிடித்து விழுப்புரம் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், புதுச்சேரி மாநிலம், முதலியார்பேட்டை வேல்முருகன் மகன் செல்வம், 23; தவளக்குப்பம் அய்யனார் மகன் மணிகண்டன், 28; என தெரிந்தது. உடன் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து சரக்கு வேனை பறிமுதல் செய்தனர்.

மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது

மயிலம் அடுத்த பெரும்பாக்கம் செக்போஸ்ட்டில், நேற்று மாலை திண்டிவனம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியிலிருந்து வந்த ரெனால்ட் காரை சோதனை செய்தனர். அதில், 144 புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிந்தது. விசாரணையில் சென்னை, ஸ்ரீபெரும்புதுார், மணம்மதிகண்டிகையைச் சேர்ந்த அந்தோணிராஜ், 46; பவுல்ராஜ், 52; என தெரியவந்தது. உடன் இருவரையும் கைது செய்து, மது பாட்டில்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை