நகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் அதிருப்தி: மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் சுணக்கம்
விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தி.மு.க., கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு மட்டும் அதிகாரிகள் விழுந்து விழுந்து கவனிக்கின்றனர். பிற வார்டுகளில் நிலவும் பிரச்னை குறித்து கூறினால் அலட்சியம் காட்டுகின்றனர் என அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வார்டுகளில் உள்ள அடிப்படை பிரச்னைகளை நகராட்சி நிர்வாகத்திற்கு கொண்டு சென்று அதை தீர்க்கும் வகையில் கவுன்சிலர்கள் உள்ளனர்.இவர்கள், மாதம் ஒருமுறை நகராட்சி அலுவலகத்தில் நடக்கும் நகர மன்ற கூட்டத்தில், தங்களின் வார்டுக்கு தேவையான சாலை, தண்ணீர், பாதாள சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசி, தீர்மானங்கள் மூலம் அதை தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுப்பது வழக்கமாகும்.நகராட்சிக்குட்பட்ட தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ள வார்டுகள் மற்றும் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் உள்ள வி.ஐ.பி., உள்ள வார்டுகளில் மட்டும் மட்டும் நகராட்சி அதிகாரிகள் கவனிக்கின்றனர்.மாற்று கட்சி கவுன்சிலர்கள் உள்ள வார்டுகளில் சாலை, பாதாள சாக்கடை பிரச்னைகள் நீடிக்கிறது. இது குறித்து அந்த கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால் அதை சரிசெய்வதற்கான நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் காட்டுகின்றனர்.இந்த பிரச்னைகளை கவுன்சிலர்கள் கொண்டு செல்வதற்கான நகர மன்ற கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, லோக்சபா தேர்தல், இடைத்தேர்தல் நடத்தை விதிமுறையை காரணம் காட்டி நகர மன்ற கூட்டம் நடத்தப்படவில்லை. இதனால், நகரில் பல்வேறு இடங்களில் நிலவும் பிரச்னைகளை தீர்க்க முடியாமல் கவுன்சிலர்கள் திணறி வருகின்றனர்.ஓட்டு போட்ட பொதுமக்களுக்கு பதில் கூற முடியவில்லை என புலம்புகின்றனர். இந்த சூழலில், இன்று 30ம் தேதி நகர மன்ற கூட்டம் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்தில், கவுன்சிலர்கள், மக்களின் பிரச்னைகள் குறித்து பேசி, அலட்சியத்துடன் செயல்படும் அதிகாரிகளை கண்டித்தும், கேள்வி எழுப்ப தயாராகி வருகின்றனர்.