உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க.,வில் மாவட்ட செயலாளர் கனவு: கானல் நீராகும் நிர்வாகிகளின் எதிர்பார்ப்பு

அ.தி.மு.க.,வில் மாவட்ட செயலாளர் கனவு: கானல் நீராகும் நிர்வாகிகளின் எதிர்பார்ப்பு

அ.தி.மு.க., பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு நிர்வாகிகளுக்கு பதவிகளை வழங்கும் வகையில், மாவட்டங்கள் தோறும் 2 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் வீதம் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் சண்முகம் இருந்து வருகிறார். விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, மயிலம், வானுார், திண்டிவனம் ஆகிய 6 தொகுதிகள் உள்ள நிலையில், 3 மாவட்ட செயலாளர்களை நியமிக்க தலைமை அறிவுறுத்தியுள்ளது.மாவட்ட செயலாளர் பதவியை பகிர்ந்து கொடுத்து, நெருக்கடியில் சிக்க விரும்பாத சண்முகம், மேலிட செல்வாக்கு பெற்றிருந்தாலும், தலைமையின் ஆணைக்கு கட்டுப்பட்டு, 3 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில், 2 மாவட்ட செயலாளர்களை மட்டும் நியமிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.இதனால், மாவட்ட செயலாளர் பதவியை பெற கடந்த 2 மாதங்களாக, நிர்வாகிகளிடையே தீவிர போட்டி நிலவி வருகிறது.இதற்காக மாவட்ட தலைநகர் விழுப்புரம் பகுதியில், நகர செயலாளராக உள்ள பசுபதியும், கோலியனூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு ஒரு புறமும், தீவிரமாக ஆதரவு திரட்டி வருகின்றனர்.அண்மைக்காலமாக நடைபெற்று வரும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில், இருவரும் முன்னிலைப்படுத்திக்கொண்டு, ஆதரவாளர்களை திரட்டி நிகழ்ச்சிகளை நடத்தி, மாஸ் காட்டி வருகின்றனர்.திண்டிவனம் பகுதியில், எம்.எல்.ஏ.,க்களாக உள்ள அர்ஜூனன் ஒருபுறமும், சக்கரபாணி ஒருபுறமும் தீவிரமாக போட்டியில் களம் இறங்கியுள்ளனர். நேரடியாக மாவட்ட செயலாளர் பதவிக்கு முயற்சித்தால் சண்முகம் விரும்ப மாட்டார், தங்களை ஓரங்கட்டி விடுவார் என்ற அச்சத்தில், 2 பேரும் தங்கள் ஆதரவாளர்கள் மூலம், சண்முகம், அவரது அண்ணன் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு துாதுவிட்டு வருகின்றனர்.திண்டிவனத்தில் ஏற்கனவே சண்முகத்துக்கு நெருங்கிய ஆதரவாளராக இருந்த ஷெரிப், பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்து, மாவட்ட செயலாளர் பதவிக்கு வலியுறுத்தியிருந்தார். அதனை அறிந்த சண்முகம், அவரை ஓரங்கட்டியதால் அவர் தினகரன் அணிக்குச் சென்று விட்டார்.இதனால் தற்போது 2 எம்.எல்.ஏ.,க்களும், மறைமுகமாக தங்களது ஆதரவாளர்கள் மூலம் மாவட்ட செயலர் பதவி கிடைக்க ரகசியமாக காய் நகர்த்தி வருகின்றனர்.ஏற்கனவே தற்போது தி.மு.க.,வில் உள்ள லட்சுமணன் மாவட்ட செயலாளராக இருந்தபோது, போட்டியும், நெருக்கடியும் சந்தித்தவர் சண்முகம். இதனால் மீண்டும் ஒரு நெருக்கடியை சந்திக்க அவர் விரும்பவில்லை.குறிப்பாக மாவட்ட தலைநகர் விழுப்புரத்தில், பிற நிர்வாகிகளை மாவட்ட செயலாளராக நியமிக்க விரும்பாமல், விழுப்புரம் பகுதி மாவட்ட செயலாளராக சண்முகமும், திண்டிவனம் பகுதியில் தனக்கு ஆதரவாளராக உள்ள ஒருவரையும் மாவட்ட செயலாளராக நியமித்து செயல்படவும் திட்டம் வகுத்துள்ளார்.3 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் விழுப்புரம், விக்கிரவாண்டி, மயிலம் தொகுதிக்கு சண்முகமும், திண்டிவனம், வானுார், செஞ்சி தொகுதிக்கு மற்றொரு நபரையும் நியமிக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதனால், விழுப்புரம் பகுதி நிர்வாகிகள் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தையே அளிக்கும் என கட்சியினர் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை