மேலும் செய்திகள்
இன்று இனிதாக-திருப்பூர்
30-Apr-2025
விழுப்புரம் மாவட்டத்தில் அ.தி.மு.க.,வினர் பொதுக் கூட்டங்களை 8:00 மணிக்குள் முடித்து விடுகின்றனர். தி.மு.க.,வினர் 10:00 மணி வரை நீட்டிப்பதால் இதில் பங்கேற்கும் பெண்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டு கட்சிகளும் பிரதான கட்சிகளாக இருந்தாலும் பொதுக் கூட்டத்திற்கு கூட்டம் சேர்க்க பெண்களையே நம்பியுள்ளனர். கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள கிராமங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் மூலம் இரண்டு கட்சியினரும் வேன்களில் பெண்களை அழைத்து வருகின்றனர். வழக்கமாக பொதுக்கூட்டம் 6:00 மணிக்கு துவங்கும் என இரண்டு கட்சிகளும் அறிவிப்பு செய்கின்றனர். எனவே, பெண்களை மாலை 5:00 மணிக்கு வீட்டில் இருந்து அழைத்து வந்து மேடை முன் அமர வைத்து விடுகின்றனர். அ.தி.மு.க.,வினர் 6:00 மணிக்கு கலை நிகழ்ச்சியை துவங்குகின்றனர். 7:00 மணிக்கு பொதுக்கூட்டத்தை துவக்கி 8:00 மணி முதல் 8:30 மணிக்குள் முடித்து விடுகின்றனர்.பெண்களை நீண்ட நேரம் காக்க வைக்க கூடாது என்று மாவட்ட செயலாளர் சண்முகம் கூட்டத்தில் பேசும் போது வெளிப்படையாக பேசுகிறார். தான் கலந்து கொள்ளாத கூட்டத்திலும் இரவு 8:00 மணிக்கு கூட்டத்தை முடிக்க வேண்டும் என கட்சியினருக்கு கட்டளையிட்டுள்ளார். இதனால் அ.தி.மு.க.,வினர் கூட்டத்தை விரைவாக முடித்து விடுகின்றனர். தி.மு.க., வினர் 6:00 மணிக்கு துவங்க வேண்டி கூட்டத்தை பெரும்பாலும் 7:00 மணிக்கு துவங்குகின்றனர். முக்கிய பிரமுகர்கள் 8:30 மணிக்கு பிறகே மேடைக்கு வருகின்றனர். அதன் பிறகு வரிசையாக கட்சி நிர்வாகிகளும், சிறப்பு பேச்சாளர்களும் பேசி முடிக்க இரவு 10:00 மணி ஆகிறது. 5:00 மணிக்கு அழைத்து வரப்படும் பெண்கள் உணவின்றி இரவு 10:00 மணி வரை காத்திருக்கின்றனர். இதில் சிக்கி கொள்ளும் வயதான பெண்கள் 5:00 மணி நேரம் கழிவறைக்கு போக வசதியின்றி அவதிப்படுகின்றனர். இரவு 10:00 மணிக்கு கூட்டம் முடிந்தது வீடு போய் சேர்வதற்கு மேலும் கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் தி.மு.க., கூட்டங்களுக்கு வரும் பெண்கள் அதிருப்தியில் புலம்பியபடியே திரும்பிச் செல்கின்றனர்.
30-Apr-2025