கல்வித்துறை பணியாளர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சுப் பணியாளர் மாவட்ட நலச் சங்கத்தின் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.விழுப்புரம் சி.இ.ஓ., அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் பாரதிராஜா, செயலாளர் ராமமூர்த்தி, துணை செயலாளர் ருக்குமணி, பொருளாளர் வினோத்குமார், அமைப்புச் செயலாளர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பல பள்ளிகளில் அலுவலக உதவியாளர்கள் மற்றும் காவலர்கள் பணியிடம் காலியாக உள்ளதால், அந்த பணிகளையும், கணினி இல்லாத பள்ளிகளுக்கான ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., பட்டியல் தயாரித்து கருவூலத்தில் சமர்ப்பிக்கும் பணியையும் செய்து வருகின்றனர்.மேலும், கூடுதலாக எமிஸ் தொடர்பான அனைத்து பணிகளையும் அமைச்சு பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. எனவே அமைச்சுப் பணியாளர்களின் பணி சுமையை நீக்க வேண்டும்.கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நிர்வாகிகள் பேசினர்.