உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தில் விதிமீறிய செங்கல் சூளையால் விவசாயிகள் தவிப்பு! பாதை ஆக்கிரமிப்பு, மண் சரிவால் பயிர்கள் பாதிப்பதாக புகார்

விழுப்புரத்தில் விதிமீறிய செங்கல் சூளையால் விவசாயிகள் தவிப்பு! பாதை ஆக்கிரமிப்பு, மண் சரிவால் பயிர்கள் பாதிப்பதாக புகார்

விழுப்புரம், : விழுப்புரம் அருகே மேல்பாதி, பிள்ளையார்குப்பம் சுற்றியுள்ள கிராமங்களில் விளை நிலங்களில் விதிகளை மீறி நீண்டகாலமாக சூளைக்கு மண் எடுத்து வருவதால், சுற்றுப்புற விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.விழுப்புரம் அருகே பிள்ளையார்குப்பம், மேல்பாதி, அனிச்சம்பாளையம், கல்லப்பட்டு சுற்றியுள்ள கிராம பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக விளை நிலங்களில் மண் எடுத்து, சூளையிட்டு செங்கல் தயாரித்து வருகின்றனர். சிலர், விவசாய நிலங்களில் அதிகளவில், விதிமீறி ஆழமாக மண் எடுத்து சூளையிட்டு வந்த நிலையில், சிலர் அதன் கீழே உள்ள சவுடு மணலையும் விற்பதால், பயிர்கள் பாதிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, பிள்ளையார்குப்பம் விவசாயிகள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் 50 ஏக்கர் அளவில் விவசாயிகள் பலர், தங்கள் நிலங்களில் சூளைக்கு மண் எடுத்து, செங்கல் விற்று வருகின்றனர். சிலர் நிலத்தை குத்தகைக்கு விட்டுள்ளதால், வியாபாரிகள் செங்கல் சூளைக்காக அதிகளவில் 3 முதல் 5 அடி ஆழத்தை தாண்டி, விதிமீறி 5 முதல் 12 அடி ஆழம் வரை மண் எடுத்து, பாதாள பள்ளங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.இதனால், சமதள பரப்பில் பயிரிட்டு வரும் பிற விவசாயிகளின் நிலம் பாதிக்கப்படுகிறது. சூளை பள்ளங்களுக்கு, பக்கத்து நிலத்தின் வரப்பு வரை இவர்கள் பள்ளமிடுவதால், மண் சரிந்து நீர்பாசனம் பாதிக்கிறது. மழையின்போது மண் சரிந்து நிலமும் பாதிக்கிறது. சுற்றிலும் சூளை பள்ளங்கள் இருப்பதால், விளை பொருள்களை எடுத்துச் செல்ல வழியின்றி ஆண்டு தோறும் தவிக்க வேண்டியுள்ளது. நீர்பாசனத்துக்கு, பக்கத்து நிலத்துக்கும் வாய்க்கால் நீரை கொண்டு செல்ல முடியவில்லை. மணிலா, சவுக்கு, மரவள்ளி, கொய்யா போன்ற 100 ஏக்கர் அளவில் விவசாயிகள் பயிரிட்டு வந்த நிலையில், இந்த செங்கள் சூளைகள் ஆக்கிரமிப்பால், பயிரிடும் பரப்பு குறைந்துவிட்டது. சூளைக்கு மண் எடுத்த நிலையில், சிலர் அடியில் கிடைக்கும் சவுடு மணலை எடுத்து, இரவு நேரங்களில் விற்பதும், அதனால் புகார்கள் எழுந்து போலீசார், வருவாய்த்துறையினர் வந்து பிடிப்பதும் தொடர்கிறது. ஆனால், விதிமீறிய மண், மணல் சுரண்டலை தடுக்காத அதிகாரிகள், அவர்களிடம் கமிஷன் வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.பக்கத்து கிராமங்களில் சிலர் அருகே செல்லும், ஏரி, நீர்வரத்து வாய்க்கால் பகுதியையும் ஆக்கிரமித்து மண் எடுத்து பயன்படுத்துவதால், விவசாய ஏரி பாசனமும் முடங்கிவிட்டது. கிராமங்களில் மோதலும் எழுகிறது. இதனால், இந்த பகுதியில் எஞ்சியுள்ள விவசாயத்தை பாதுகாக்கவும், சுற்றிலும் பயிரிடும் விவசாய நிலங்களுக்கு பொது வழி, மண் சரிவு, ஆக்கிரமிப்பு பிரச்னைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை