பட்டாசு தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஜாக்கிரதை! பாதுகாப்பு விதிகளை பின்பற்ற கலெக்டர் அறிவுரை
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி கூட்டத்தில், பட்டாசு தயாரிப்பின்போது, சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, கூடுதல் எஸ்.பி., தினகரன், மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, தொழிலக பாதுகாப்புத் துறை இணை இயக்குனர் சித்ரா முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில், மாவட்டத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உரிமையாளர்கள், அரசின் பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி பட்டாசு தயாரிப்பது. பட்டாசு தயாரிப்பு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் தீ விபத்து ஏற்பட்டால், எவ்வாறு தீ தடுப்பு பணிகளை மேற்கொள்வது. பட்டாசு வாங்கிச்செல்லும் கடை உரிமையாளர்கள் பட்டாசுகளை பாதுகாப்பாக கொண்டு சென்று விற்பனை செய்வது குறித்தும் விளக்கப்பட்டது.கூட்டத்தில் கலெக்டர் பழனி பேசியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில், பட்டாசு தயாரிக்கும் தொழிலில் பாதுகாப்பு அவசியம். விபத்துகள் ஏற்படுவதால், கவனமாக செயல்பட வேண்டும். பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், சட்டதிட்டங்களுக்குட்பட்டு பட்டாசு தயாரிக்க வேண்டும்.தடை செய்யப்பட்ட பேரியம் நைட்ரேட், பொட்டாசியம் குளோரேட் போன்ற ரசாயனங்களை உபயோகப்படுத்தக் கூடாது. தடை செய்யப்பட்ட சரவெடி, அதிக சத்தம், புகை உண்டாக்கக்கூடிய தயாரிப்புகள் மேற்கொள்ளக் கூடாது.ஒரே நேரத்தில் அதிகளவில் கெமிக்கல்களை கலந்து இருப்பு வைத்து அடுத்த நாள் உபயோகப்படுத்தாமல், 30 நிமிட தயாரிப்பு அளவிற்கு மட்டும் கலந்து உற்பத்தி பணி மேற்கொள்ள வேண்டும்.பட்டாசு தயாரிப்பு இடத்தில், இரும்பினாலான கதவு, தராசு, படிக்கல், குத்துாசி, சாவி, பூட்டு போன்ற கருவிகளை உபயோகப்படுத்தக் கூடாது. அனைத்து அறைகளிலும் ரப்பர் மேட், கால் மிதியடி பயன்படுத்துவேண்டும். மொபைல்போன், ரேடியோ போன்றவை தொழிற்சாலை உற்பத்தி அறையில் உபயோகப்படுத்தக் கூடாது.மிக்சிங், பில்லிங் அறையில் 2 பேரும், உற்பத்தி அறையில் 4 பேருக்கும் மிகாமல், கதவின் அருகில் உட்கார்ந்து பணிபுரிய வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் மரத்தடியில் அமர்ந்து உற்பத்தியில் ஈடுபடக்கூடாது.அறைக்கு வெளியே கூடுதலாக பிளாஸ்டிக், இதர ஷீட்டுகளால் கொட்டகை அமைத்து வெளியில் உட்கார்ந்து பணிபுரியக் கூடாது.மனித உயிர் விலைமதிப்பற்றது என்பதால், தொழிற்சாலையில் எந்த விபத்தும் நடக்காமல் இருப்பதற்கான வழிமுறைகளைக் கட்டாயம் கடைபிடித்திட வேண்டும். 18 வயதிற்கு கீழான தொழிலாளர்களை ஈடுபடுத்தக்கூடாது, உரிமத்துடன் மட்டும் உற்பத்தி மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பழனி பேசினார்.தொடர்ந்து, 'பட்டாசு தயாரிப்பில் பாதுகாப்பு வழிமுறைகள்' என்ற பாதுகாப்பு கையேடு, வழங்கப்பட்டது. பின், அனைவரும் பட்டாசு உற்பத்தி பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழி ஏற்றனர்.