உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / எஸ்.ஐ.ஆர்., பணிகளால் அரசு ஊழியர்கள்...  புலம்பல்; கூடுதல் பணிச்சுமை வழங்கப்படுவதாக புகார்

எஸ்.ஐ.ஆர்., பணிகளால் அரசு ஊழியர்கள்...  புலம்பல்; கூடுதல் பணிச்சுமை வழங்கப்படுவதாக புகார்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., படிவங்களை பெறும் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு, கூடுதலாக டிட்வா புயல், மழை பாதுகாப்பு பணிகளும் வழங்கப்பட்டுள்ளதால் பணிச்சுமையால் அவதியடைகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த 4ம் தேதி துவங்கியது. இந்த பணிகள் வரும் டிச., 4ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தில் 17 லட்சத்து 27 ஆயிரத்து 490 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஓட்டுச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள வருவாய் துறை ஊழியர்கள் மூலம் கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெற்று, அதை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகள் விழுப்புரம் மாவட்டத்தில் 72 சதவீதம் முடிந்த நிலையில் மீதமுள்ள பணிகள் தொடர்கிறது. இதனால், வருவாய்த் துறை ஊழியர்கள், தங்களின் துறை சார்ந்த பணிகளில் கவனம் செலுத்த முடியாமலும், இதற்காக வந்து செல்லும் மக்களிடம் பதில் கூற முடியாமல் தவிக்கின்றனர். இந்த சூழலில், மாவட்ட நிர்வாகம் மூலம் எஸ்.ஐ.ஆர்., பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளதால், வாக்காளர்களிடம் வழங்கிய எஸ்.ஐ.ஆர்., படிவங்களை பூர்த்தி செய்து பெறும் பணிகளில் தீவிரம் காட்டுகின்றனர். இந்த பணிகளில் 1,970 ஓட்டுப்பதிவு மைய அலுவலர்கள், 200 மேற்பார்வையாளர்கள், 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். பணிகள் இன்னும் முழுமையாக முடிக்கப்படாத நிலையில், எஸ்.ஐ.ஆர்., படிவங்களை சமர்ப்பிக்க வரும் 11ம் தேதி வரை கால அவகாசத்தை நீடித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில், அரசு ஊழியர்களுக்கு மேலும் கூடுதல் பணிச்சுமையாக டிட்வா புயல் கனமழையை யொட்டி, இதற்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகளும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், தங்களின் அரசு துறைகள் சார்ந்த மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பம் பெறும் பணிகளும், கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை பணிகளால் சுணக்கம் ஏற்பட கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கூடுதல் பணிச் சுமைகளால் அரசு ஊழியர்கள் பலர் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படுவதாக புலம்பி வருகின்றனர். துறை சார்ந்த பணிகள், எஸ்.ஐ.ஆர்., பணி, மழை பாதிப்பு பணிகள் என அடுத்தடுத்த பணிச்சுமைகள் அரசு ஊழியர்கள் மீது கூடுதலாக திணிக்கப்படுவதாக புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ