விழுப்புரம்: போக்குவரத்து தொழிற்சங்கங்களின் 2வது நாள் வேலை நிறுத்தத்தை யொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் இயங்கியது.விழுப்புரம் அரசு போக்குவரத்து பணிமனைகளில் இருந்து அரசு பஸ்கள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. தற்காலிக ஓட்டுனர்கள், கண்டெக்டர்கள் மூலம் அரசு பஸ்களை, போக்குவரத்து கழக அதிகாரிகள் இயக்கினர். இதனால், பயணிகளுக்கு ஏதும் பாதிப்பின்றி 2வது நாளாக அரசு பஸ்கள் பெரும்பாலும் இயங்கியது.இந்த நிலையில், தொழிற்சங்க நிர்வாகிகள், நேற்று காலை 7.30 மணிக்கு போக்குவரத்து பணிமனை 2,3 கிளைகளில் சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு, பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.அதே போல், 11.00 மணிக்கு மேல், போக்குவரத்து கழகம் தலைமை பணிமனை முன், போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள், துண்டை விரித்து நுாதனமாக பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். நிர்வாக பணியாளர் சங்கம் பொது செயலாளர் தங்கபாண்டியன், எம்.எல்.எப்., பொது செயலாளர் மனோகர், பாட்டாளி தொழிற்சங்கம் ஞானதாஸ், சி.ஐ.டி.யூ., ரகோத்தமன், ஓய்வு பெற்றோர் அமைப்பு நிர்வாகிகள் ராமமூர்த்தி, துரைராஜ், ராஜகோபால் ஆகியோர் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர்.