உயர் கல்வி வழிகாட்டி சிறப்பு குறைகேட்பு முகாம்
விழுப்புரம் :விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டி சிறப்பு குறைகேட்பு முகாம் நடந்தது.முகாமிற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். முகாமில், மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் உள்ள 35 அரசு பள்ளிகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று பல்வேறு காரணங்களால் உயர் கல்வி சேராத 12 மாணவர்கள் மற்றும் 19 மாணவியர்கள் பங்கேற்றனர்.ஒவ்வொரு மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரிடம் உயர் கல்வி சேராததற்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்து மாணவர்கள் உயர்கல்வி படிக்க அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.அப்போது, உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவ, மாணவியர்களுக்கு வங்கிக் கடனுதவிகள், தங்கி படிப்பதற்கான விடுதி வசதி, உயர்கல்வி உதவித்தொகை வழங்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.சி.இ.ஓ., அறிவழகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தமிழரசன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் நஜீர் உட்பட பலர் பங்கேற்றனர்.