உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரூ.48.49 லட்சம் மதிப்பில் பாலம் கிராம சபை கூட்டத்தில் உடனடி தீர்வு

ரூ.48.49 லட்சம் மதிப்பில் பாலம் கிராம சபை கூட்டத்தில் உடனடி தீர்வு

செஞ்சி : மேல்எடையாளம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மஸ்தான் எம்.எல்.ஏ., கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர். செஞ்சி ஒன்றியம் மேல் எடையாளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. ஊராட்சி தலைவர் செல்வி செல்வமணி தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் முன்னிலை வகித்தார். இதில், மஸ்தான் எம்.எல்.ஏ., கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். முதல்வர் ஸ்டாலின் கணொலி காட்சியில் தோன்றி, பொதுமக்களிடையே பேசினார். தொடர்ந்து நடந்த கூட்டத்தில் ஊராட்சியின் கடந்த ஆண்டு வரவு செலவு படிக்கப்பட்டது. இதில் ஜாதி பெயர் கொண்ட குடியிருப்புகள், தெருக்கள், சாலைகளுக்கும், ஆதி திராவிடர் காலனி, அரிஜன காலனி குடியிருப்புகளுக்கும் பூக்களின் பெயர்களை வைப்பது உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் 100 நாள் வேலை, வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பேசிய கிராம மக்கள், மேல் எடையாளம் - ராஜாம்புலியூர் இடையே உள்ள ஆற்றில் புதிய மேம்பாலம் கட்ட வேண்டும் என கேட்டனர். இதையடுத்து, மஸ்தான் எம்.எல்.ஏ., கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோர் உடனடியாக மாவட்ட பொறியாளருடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் ரூ. 48.49 லட்சம் மதிப்பில் பாலம் கட்டப்படும் என அதே கூட்டத்தில் அறிவித்தனர். இதில் ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் கண்ணன், மாவட்ட ஊராட்சி செயலர் நடராஜன், கால்நடை துறை திண்டிவனம் கோட்ட உதவி இயக்குநர் தண்டபாணி, தாசில்தார் துறைசெல்வம், பி.டி.ஓ.,க்கள் நடராஜன், பிரபா சங்கர், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, ஒன்றிய கவுன்சிலர் துரை, வட்டார மருத்துவ அலுவலர் யோகப்பிரியா, தோட்டகலை உதவி இயக்குநர் விஜயசந்தர், சுகந்தி, துணை தலைவர் ராதிகா ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ