கால்நடை கணக்கெடுப்பு பணி கலெக்டர் துவக்கி வைப்பு
விழுப்புரம்,: விழுப்புரம் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 21வது கால்நடை கணக்கெடுப்பு பணி துவங்கியது.மத்திய அரசு மூலம் கால்நடை கணக்கெடுப்பு ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுகிறது. தற்போது 2024ம் ஆண்டில் 21வது கால்நடை கணக்கெடுப்பு பணி துவங்கி, இந்த மாதம் முதல் வரும் 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடைபெற உள்ளது. நேற்று கணக்கெடுப்பு பணியை கலெக்டர் பழனி துவக்கி வைத்தார்.இப்பணியை மேற்கொள்ள 135 கால்நடை கணக்கெடுப்பாளர்கள், 30 மேற்பார்வையாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கால்நடை கணக்கெடுப்பை நடத்த புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மொபைல் செயலி பயன்பாடுகள் குறித்து நேர்முக, களப்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.இந்த கணக்கெடுப்பில் கால்நடை வளர்ப்போரின் பெயர், முகவரி, ஆதார் எண், மொபைல் எண், அவர்களிடம் உள்ள நில அளவு, முக்கிய தொழில், கல்வி தகுதி, கால்நடைகளின் எண்ணிக்கை இனம், வயது, பாலினம் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.வீடு தேடி வரும் கால்நடை கணக்கெடுப்பாளர்கள், புள்ளி விபர அலுவலர்களிடம் கால்நடை வளர்ப்போர் தக்க ஒத்துழைப்பு அளித்து, உரிய விபரங்களை வழங்கிட வேண்டும் என கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார். நிகழ்ச்சியில், மகளிர் மேம்பாட்டு நிறுவன திட்ட இயக்குனர் காஞ்சனா, கால்நடை பராமரிப்பு துறை லதா உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.