மணிலா விதை சான்று பண்ணை இணை இயக்குனர் ஆய்வு
மரக்காணம்; மரக்காணம் அடுத்த வடநெற்குணம் கிராமத்தில் மணிலா விதை சான்று பண்ணையை இணை இயக்குனர் ஸ்ரீவித்யா ஆய்வு செய்தார். மரக்காணம் அருகே உள்ள வடநெற்குணம் கிராமத்தை சேர்ந்த வீரவேலப்பன் என்பவர் நிலத்தில், மாநில விதை மேம்பாட்டு முகமை சார்பில், மணிலா கதிர் 1812 ரகம் சான்று விதைப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அறுவடை தருணத்தில் உள்ளதால், மணிலாவின் விளைச்சல், தரம் குறித்து சென்னை விதைச்சான்று இணை இயக்குனர் ஸ்ரீவித்யா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விவசாயிகளிடம் ஒரு ஏக்கருக்கு 200 கிலோ ஜிப்சம் இடவும், அறுவடை சமயத்தில் விதைச் சான்று நடைமுறைகளின் படி நன்கு அறுவடை செய்து தரமான விதை உற்பத்திக்கு வழி வகை செய்யுமாறு கூறினார். ஆய்வின்போது விதையாய்வு துணை இயக்குனர் சரவணன், மாவட்ட விதைச்சான்று அலுவலர் விஜயா, திண்டிவனம் விதைச்சான்று அலுவலர் மணிகண்டன், விதை ஆய்வாளர் ஜோதிமணி மாவட்ட உதவி விதை அலுவலர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.