விபத்து தடுப்பு மேம்பாலங்கள் எம்.எல்.ஏ., கோரிக்கை மனு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் விபத்துகள் நடக்கும் பகுதிகளில் சப் வே அமைக்கவும், கிடப்பில் உள்ள மேம்பாலம் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி டில்லியில் நகாய் சேர்மன் சந்தோஷ்குமார் யாதவ்விடம் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., கோரிக்கை மனு அளித்தார். மனு விபரம்: கடந்த 2009ம் ஆண்டு நகாய் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் நான்கு வழி சாலையாக மாற்றி அமைக்கப்பட்டது. பள்ளி கல்லுாரி மாணவர்கள் பாதுகாப்பாக சாலையை கடக்கவும், பொதுமக்கள், விவசாயிகள் பயன்பாட்டிற்காகவும் வி.சாலை, சூர்யா கல்லுாரி எதிரில் கீழக்கொந்தைக்கு செல்லும் வழியிலும், முண்டியம்பாக்கம் ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலைக்கு செல்லும் வழியிலும், திருவாமத்துார் கூட்ரோட்டிலும், விராட்டிகுப்பம் ஆகிய இடங்களில் கார்கள், பைக்குகள் கடந்து செல்ல சப் வே அமைக்க வேண்டும். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை எதிரே 2 ஆண்டுகளாக மேம்பாலம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேம்பாலம் பணியை விரைவில் துவக்கி முடித்திட வேண்டும். விக்கிரவாண்டி - தஞ்சாவூர் நான்கு வழிச்சாலையில் மேம்பால பணி நடைபெறும் இடங்களில் சேதமடைந்த சர்வீஸ் சாலைகளை சிமென்ட் சாலைகளாக மாற்றி அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.