சேறும் சகதியுமாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
திண்டிவனம்: சாலையில் கொட்டப்பட்ட மண், மழையில் சேரும் சகதியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திண்டிவனம் இந்திராகாந்தி பஸ் நிலையம் அமைந்துள்ள சாலை வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த பஸ் நிலையத்திற்கு செஞ்சி, காஞ்சிபுரம் மற்றும் கிராமப்புறங்களுக்கு செல்வதற்கு ஏராமான பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக மயிலம் சாலையில் இருந்து நகரப்பகுதிக்கு வருபவர்களுக்கு, இந்த சாலையே பிரதானமாக உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில், பாதாள சாக்கடை திட்ட பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கருங்கல் ஜல்லியை கொட்டி வைத்திருந்தனர். தற்போது பருவமழை காரணமாக அந்த பகுதியில் உள்ள பள்ளத்தை அடைக்க, மண் அவசர அசவரமாக கொட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை பெய்த கன மழையால், அந்த சாலை சேறும், சகதியுமாக மாறியது. இதனால் மழையில் வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்தனர். அங்கு ஒரே நாளில், 5க்கும் மேற்பட்டோர் சேற்றில் வழுக்கி விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.