பன்றிகளை பிடிக்க எதிர்ப்பு
விழுப்புரம் : விழுப்புரத்தில் நகரில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடிக்கும் பணி, நகராட்சி சார்பில் துவங்கிய நிலையில், அதற்கு பன்றி வளர்ப் போர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் நகரில் சாலாமேடு, வழுதரெட்டி, எருமந்தாங்கல், பாணாம்பட்டு பகுதிகளில், சிலர் பன்றிகளை வளர்த்து வருகின்றனர். இது போல், பல இடங்களில் வளர்க்கப்படும் பன்றிகளை, பகல் நேரங்களில் வெளியே மேய்ச்சலுக்கு விடுவதால், அந்த பன்றிகள் குடியிருப்பு பகுதிகள், கழிவு நீர் கால்வாய்களில் உழன்றும் வருகின்றன.இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொது மக்கள் தரப்பில் நகராட்சிக்கு புகார்கள் தொடர்ந்து வந்தன. நகர மன்ற கூட்டங்களிலும், பன்றியை பிடிக்க வேண்டும் என, கவுன்சிலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, சேர்மன், கமிஷனர் ஆகியோர் நகரில் திரியும் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.அதன்படி, மதுரையைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம் பன்றிகளை பிடிக்கும் பணி நேற்று நடந்தது. அவர்கள் மினி லாரியில் சென்று, விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெரு, நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு அருகேயும், குழந்தைவேல் நகர் பகுதி காலி மனை, தனலட்சுமி கார்டன், மாம்பழப்பட்டு சாலை உள்ளிட்ட இடங்களிலும் 50க்கும் மேற்பட்ட பன்றிகளை பிடித்தனர்.அப்போது, பன்றி வளர்ப்போர், பன்றிகளை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சி ஊழியர்கள் மற்றும் பன்றி பிடிக்கும் குழுவினரிடம் தகராறில் ஈடுபட்டனர்.பன்றிகளை நம்பி நாங்கள் பிழைத்து வருகிறோம். எனவே, அவைகளை பிடிக்கக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.நகரில் திரியும் பன்றிகளைப் பிடிக்க பொதுமக்களிடமிருந்து புகார் வந்ததால், நகராட்சி மூலம் பிடித்து, அதனை காட்டில் விட நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏற்கனவே பன்றி வளர்ப் போருக்கும் பல முறை நோட்டீஸ் கொடுத்தும் அவர்கள், குடியிருப்புகளில் பன்றிகளை திரிய விடுகின்றனர். அதனால், பன்றிகளை பிடிக்க தொடங்கியுள்ளதாக, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.