| ADDED : ஜன 05, 2024 12:37 AM
விழுப்புரம் : வளவனுார் பைபாசில் பாலம் கட்ட தடையாக உள்ள உயர்மின்னழுத்த டவர்கள் மாற்றியமைக்கும் பணியை, விவசாயிகள் தடுத்து நிறுத்தினர்.விழுப்புரம் -நாகை நான்கு வழிச்சாலை திட்ட பணியில், விழுப்புரம் - புதுச்சேரி இடையே வளவனுார் அடுத்த கெங்கராம்பாளையத்தில் பைபாஸ் சந்திப்பு பாலம் கட்டும் பணி நிலுவையில் உள்ளது. பாலம் கட்டுமான பணி துவங்கி 2 ஆண்டுகளாகிய போதிலும், பாலத்தின் மையப்பகுதியில் உள்ள 2 உயர்மின்னழுத்த டவர்கள் மாற்றி அமைக்காததால், பாலம் கட்டுமான பணி தடைப்பட்டுள்ளது.இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானதை தொடர்ந்து பாலம் கட்டுமான பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். அதனையொட்டி நேற்று, சாலை ஒப்பந்த நிறுவன பணியாளர்கள், கெங்கராம்பாளையத்தில் மின் டவரை மாற்றி அமைக்க ஏற்கனவே கையகப்படுத்தி அடித்தளம் அமைத்த நிலத்தில் பூர்வாங்க பணிகளை தொடங்கினர்.அப்போது, அங்கு நிலம் கொடுத்த விவசாயிகள், நிலத்துக்கான இழப்பீடு தொகையை வழங்காமல் பணியை தொடங்கக்கூடாது என தடுத்து நிறுத்தினர். தகவலறிந்த வளவனுார் போலீசார், டவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகளிடம் விசாரித்தனர். பின்னர், இதுகுறித்து வருவாய்த்துறை, நகாய் திட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறி, விவசாயிகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.இதனால், அங்கு டவர்களை மாற்றி அமைக்கும் பணி தடைப்பட்டுள்ளது.