உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதி

போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதி

விழுப்புரம்: வளவனுாரில் தொடரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண கோரிக்கை எழுந்துள்ளது. வளவனுார் பேரூராட்சியில், குறுகிய சாலையால் போக்குவரத்து நெரிசல் தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, விழுப்புரம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில், வளவனுார் சத்திரம் பஸ் நிறுத்தம் துவங்கி, கடை வீதி நான்கு முனை சந்திப்பு வரை கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சாலையோரம் நீண்டகாலமாக தொடரும் கடைகளால், குறுகிய சாலை பகுதி என்பதால் நெருக்கடி தொடர்கிறது. நீண்டகால போராட்டத்திற்கு பிறகு, இடையே சத்திரம் பகுதியிலிருந்து அரை கி.மீ., தொலைவு மட்டும் ஆக்கிரமிப்புகளை இடித்து அகலப்படுத்தினர். பிறகு பாதியில் கைவிடப்பட்டது. இதனால், வளவனுார் நான்கு முனை சந்திப்பு பகுதியில், தினசரி காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரையும், மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விழுப்புரம்-புதுச்சேரி மார்க்க பஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், தனியார் நிறுவன வேலைக்கு செல்வோர் இந்த நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். புதுச்சேரி-நாகை பைபாஸ் வளவனுார் வழியாக இருந்தும், கனரக வாகனங்கள் மட்டுமே அதில் பிரிந்து செல்வதால், வளவனுாரில் நெரிசல் நிலை தொடர்ந்து வருகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: வளவனுார் நான்குமுனை சாலை சந்திப்பில், போலீஸ் பூத் இருந்தும் பெரும்பாலும் போலீசார் இல்லாததால், இந்த அலுவல் நேர டிராபிக்கில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இங்கு நிரந்தரமாக போலீசார் அல்லது போக்குவரத்து போலீசாரை நியமித்து கண்காணிக்க வேண்டும். அங்குள்ள பஸ் நிறுத்த ஷெட்டும் பயணிகள் பயன்படுத்த முடியாமல் டூவீலர் பார்க்கிங்காக ஆக்கிரமித்துள்ளதால், மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், விழுப்புரம்-புதுச்சேரி சாலை, சிறுவந்தாடு சாலை, இளங்காடு சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை ஆய்வு செய்து, நீண்டகால டிராபிக் நெரிசல் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி