|  ADDED : ஜன 23, 2024 11:37 PM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அருகே பள்ளி மாணவர்கள் டவுன் பஸ்சை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.தாயனுார் அடுத்த மானந்தல் ஊராட்சி, சீயப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், மேல்மலையனுாரில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர்.மாணவர்களின் வசதிக் காக செஞ்சியிலிருந்து சீயப்பூண்டி கிராமத்தின் வழியாக மேல்மலையனுாருக்கு காலை நேரத்தில் தடம் எண்.8 டவுன் பஸ் இயக்கப்படுகிறது.மாலையில் பள்ளி விடுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக மேல்மலையனுாரிலிருந்து செஞ்சிக்கு டவுன் பஸ் சென்று விடுகிறது. இதனால் பள்ளி முடிந்து மாலை நேரத்தில் வீடு திரும்ப முடியாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 7 கி.மீ., துாரம் நடந்து வரும் அவலம் உள்ளது.இது குறித்து மாணவர்களும், கிராம மக்களும் போக்குவரத்து துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர் கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நேற்று காலை 9:30 மணிக்கு சீயப்பூண்டி கிராமத்திற்கு வந்த அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.இனிமேல் மாலையில் சரியான நேரத்திற்கு வருவதாக டிரைவரும், கண்டக்டரும்  மாணவர்களிடம் கூறியதைத் தொடர்ந்து, மறியலை கைவிட்டு பஸ்சை விடுவித்தனர்.கிராம பகுதி மாணவர்களின் நலன் கருதி போக்குவரத்துக் கழக அதிகாரிகள் டவுன் பஸ்சை பள்ளி நேரத்தில் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.