விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சமூக நீதி மாணவர் மற்றும் மாணவி விடுதிகளில் 2வது ஆண்டாக நல்லோசை - களமாடு பல்திறன் போட்டிகள் மற்றும் கலை கொண்டாட்ட விழா நடந்தது. இதில், மேடை நிகழ்வுகள், அரங்கம் சாரா நிகழ்வுகள் உள்ளிட்ட கலை போட்டிகளும், பல்வேறு விளையாட்டு போட்டிகளும் கடந்த அக்டோபர் மாதம் மாவட்ட அளவில் பேச்சு, பாட்டு போட்டி, இசைக்கருவி, ஓரங்க நாடகம், முக ஓவியம், ரங்கோலி போட்டிகள் நடந்தது. அதே போல், அரங்கம் சாரா நிகழ்வுகளான புகைப்படம் எடுத்தல், போஸ்டர் உருவாக்கம், கவிதை எழுதுதல், கதை எழுதுதல், ஓவிய போட்டிகளும், பேட்மிட்டன், கைப்பந்து, எறிபந்து, கேரம், சதுரங்கம் ஆகிய போட்டிகளில் 113 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, பதக்கம், சான்றிதழ் வழங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வளர்மதி, அரசு சமூக விடுதி காப்பாளர்கள் கபிலன், ஜெயமூர்த்தி, இமாகுலேட் சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.