| ADDED : டிச 04, 2025 05:51 AM
விக்கிரவாண்டி: வீடூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் அணை பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் அணை, கனமழை காரணமாக கடந்த அக்டோபர் 22ம் தேதி முழு கொள்ளளவான 32 அடியில் (605 மில்லியன் கன அடி) 31.100 அடியை (534.528 மில்லியன் கன அடி) எட்டியது. இதையடுத்து கடந்த மாதம் 19ம் தேதி முதல் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் தினமும் 40 கன அடி திறந்து விடப்பட்டது. இந்நிலையில், டிட்வா புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து உள்ளது. நேற்று காலை 6:00 மணியளவில் அணையில் 29.00 அடி (391.384 மில்லியன் கன அடி) தண்ணீர் இருந்தது. மழை காரணமாக நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 940 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. அணை பாதுகாப்பு கருதி, 900 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அருணகிரி தலைமையில் உதவி செயற்பொறியாளர் அய்யப்பன், உதவி பொறியாளர் பாபு ஆகியோர் அணைக்கு நீர் வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மழை அதிகரிக்கும் நிலையில், அணையிலிருந்து கூடுதல் மதகுகளை திறந்து உபரி நீரை வெளியேற்ற உள்ளனர். இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.