உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மாவட்ட காங்., தலைவருக்கான போட்டி: நிர்வாகிகளுக்குள் குஸ்தி ஆரம்பம்

 மாவட்ட காங்., தலைவருக்கான போட்டி: நிர்வாகிகளுக்குள் குஸ்தி ஆரம்பம்

த மிழக காங்., கட்சியில் தற்போதுள்ள மாநில தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு, மாணிக்தாக்கூர் எம்.பி., என கோஷ்டிகளின் எண்ணிக்கை அதிகமாக கொடி கட்டி பறக்கிறது. தற்போது, மாநில அளவில் 72 மாவட்ட தலைவர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் கோஷ்டி தலைவர்களின் ஆதரவுடன் மாவட்ட தலைவர்களாக வலம் வருகின்றனர். மாநிலம் முழுவதும், நீண்ட காலமாக இருந்து வரும் மாவட்ட தலைவர்களை மாற்றுவதற்கும், செயல்படாத தலைவர்களை ஓரங்கட்டும் வகையில், காங்., கட்சிக்கு புதுரத்தம் பாய்ச்சவும் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வதற்கான நடவடிக்கை சூடுபிடித்துள்ளது. புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வது தொடர்பாக விழுப்புரம் வடக்கு மாவட்டத்திற்கும், மத்திய மாவட்டத்திற்கும் மேலிட பார்வையாளராக தெலுங்கான மாநிலத்தைச் சேர்ந்த மாநில காங்., மாணவரணி தலைவர் வெங்கட் என்பவரை கட்சி தலைமை நியமித்துள்ளது. இவர், தொகுதி வாரியாக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, ஒவ்வொரு நிர்வாகிகளையும் தனித்தனியாக அழைத்து, தற்போதுள்ள விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவரின் செயல்பாடுகள் குறித்தும், புதிதாக யாரை நியமிக்கலாம் எனவும் கருத்துகளை கேட்டறிந்தார். வடக்கு மாவட்ட தலைவரான ரமேஷ், கடலுார் எம்.பி., விஷ்ணுபிரசாத்தின் தீவிர ஆதரவாளர். இவர் 2 முறை மாவட்ட தலைவராக பதவியில் உள்ளார். இவர் மீண்டும் மாவட்ட தலைவர் பதவிக்கு முயற்சிக்கிறார். இதே போல் புதிய மாவட்ட தலைவர் பதவியை பிடிக்க ஒவ்வொரு கோஷ்டியை சேர்ந்தவர்களும் தங்கள் கோஷ்டி தலைவரின் ஆதரவுடன் காய் நகர்த்தி வருகின்றனர். அதன்படி, தற்போதுள்ள மாநில தலைவர் செல்வபெருந்தகை மற்றும் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு ஆதரவுடன், மாநில துணைத் தலைவராக உள்ள ரங்கபூபதி, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் ஆதரவாளரான செஞ்சியை சேர்ந்த தினகரன், திண்டிவனம் நகர தலைவராக உள்ள விநாயகம் (விஷ்ணுபிரசாத் ஆதரவாளர்) மாணிக்தாக்கூர் ஆதரவுடன் உதயானந்தன், மாநில பொதுக்குழு உறுப்பினர் இல கண்ணன் உள்ளிட்ட பலர் போட்டியில் உள்ளனர். மாவட்ட தலைவர் பதவிக்கு 60 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆனால், 60 வயதைக் கடந்த நிர்வாகிகளும் விண்ணப்பித்துள்ளனர். விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., தலைவர் பதவியை பிடிப்பதற்கு ஒவ்வொரு கோஷ்டியை சேர்ந்தவர்களும் களத்தில் உள்ளதால், கோஷ்டி மோதல் உச்சத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை