தண்டவாள பராமரிப்பு பணி: ரயில்கள் தாமதம்
விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடந்ததால், சில ரயில்கள் சேவையில் தாமதம் ஏற்பட்டது. விழுப்புரம் ரயில் நிலையத்தில், ரயில் பெட்டிகளின் இயக்கத்தை தாங்கும் வகையில், தண்டவாளங்கள் உறுதியாக உள்ளதா என அடிக்கடி பராமரிப்பு பணி செய்து வருகின்றனர்.அதன்படி, நேற்று ரயில் நிலைய யார்டு பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்தது. காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை, ரயில்வே தொழில் நுட்ப ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். பழைய தண்டவாளங்களை அகற்றிவிட்டு புதிய தண்டவாளங்களை பொருத்தும் பணிகளும், ஜல்லி கற்கள் புதுப்பித்தல், பாயிண்ட் மாற்றம் செய்யும் பணிகளும் நடந்தது. இதனால், ஒரு சில ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது. குறிப்பாக, விழுப்புரத்திற்கு மதியம் 1.15 மணிக்கு வர வேண்டிய சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ், 2 மணி நேரம் தாமதமாக மதியம் 3.15 மணிக்கும், 3.30 மணிக்கு வர வேண்டிய திருச்சி-சென்னை சோழன் எக்ஸ்பிரஸ், 1 மணி நேரம் தாமதமாக மாலை 4.30 மணிக்கும் வந்து புறப்பட்டது. சென்னை-விழுப்புரம் பேசஞ்சர் ரயில், முண்டியம்பாக்கத்துடனும், திருப்பதி-புதுச்சேரி பேசஞ்சர் ரயில் விக்கிரவாண்டியுடன் நிறுத்தப்பட்டது.