| ADDED : ஜன 31, 2024 07:30 AM
செஞ்சி : செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய நினைவு சின்னமாக அங்கீகாரம் செய்ய மத்திய அரசின் கலாசாரத் துறை அமைச்சகம் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்துள்ளது.புது டில்லியில் உள்ள மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் நேற்று முன்தினம் (29ம் தேதி) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள 12ம் நுாற்றாண்டை சேர்ந்த செஞ்சி கோட்டை, மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் சல்ஹேர் கோட்டை, ஷிவ்னேரி கோட்டை, லோகாட், கந்தேரி கோட்டை, ராய்காட், ராஜ்காட், பிரதாப்காட், சுவர்ணதுர்க், பன்ஹாலா கோட்டை விஜய் துர்க், சிந்துதுர்க் ஆகிய 12 கோட்டைகள் மராட்டிய ஆட்சியின் போது ராணுவ சக்தியாக இருந்தவை.இந்த கோட்டைகள் தற்போதும் 800 ஆண்டுகளுக்கு முந்தைய சரித்திரத்தை வெளிப்படுத்துகின்றன.எனவே இந்த 12 இடங்களின் புவியியல் மற்றும் நிலப் பகுதியை உலகப் பாரம்பரிய நினைவு சின்னப் பட்டியலில் அங்கீகாரம் செய்ய வேண்டும் என யுனெஸ்கோவிற்கு பரிந்துரைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.