| ADDED : ஜூலை 25, 2024 11:12 PM
விழுப்புரம்: அயலக தமிழர் நலவாரியம் மூலம் வெளிநாடுகளில் பணிபுரியும், கல்வி பயில்வோர் அரசின் நலத்திட்டங்களை பெற வாரியத்தில் பதிந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.அயலக தமிழர் நலவாரியம் மூலம் வெளிநாடுகளில் பணிபுரியம், கல்வி பயிலும் தமிழர்களுக்காக பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த வாரியத்தில் உறுப்பினராக வெளிநாடுகளிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வாழும் 18 வயது முதல் 55 வயதுள்ள அயலக தமிழர்கள் வாரியத்தில் பதிந்து கொள்ளலாம்.அதன்படி, அயலக தமிழர் (வெளிநாடு) இந்திய கடவுச்சீட்டு மற்றும் தகுந்த ஆவணங்களோடு அயல்நாடுகளில் பணிபுரியும், கல்வி பயிலும் தமிழர்கள் மற்றும் எமிக்ரேஷன் கிளியரன்ஸ் பெறப்பட்டு வெளிநாடு செல்ல உள்ள தமிழர்கள் இந்த பிரிவில் உறுப்பினராக தகுதியுடையோர் ஆவர்.அயலக தமிழர் இந்தியாவின் பிற மாநிலங்களில் 6 மாதங்களுக்கு மேல் வசிக்கும் தமிழர்கள் இந்த பிரிவில் உறுப்பினராகலாம்.இதில் பதிவு செய்வோருக்கு, தமிழ்நாடு அரசின் அயலக தமிழர்களுக்கான புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அட்டை மூலம் வாரியத்தில் நடைமுறைப்படுத்தப்படும் காப்பீடு திட்டம், கல்வி உதவித்தொகை, திருமண உதவி திட்டங்களில் பயன்பெறலாம்.அரசின் இந்த புகைப்பட அடையாள அட்டையை கொண்டு, நலத்திட்டத்தோடு எதிர்காலத்தில் செயல்படுத்த உள்ள நலத்திட்டங்களிலும் பயன்பெறலாம்.இந்த நலவாரிய அடையாள அட்டை பெற இணையவழி பதிவு துவங்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து வசதிகள், விளக்கம் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை https://nrtamils.tn.gov.inவலைதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.வலைதளத்தில் ஒருமுறை பதிவு கட்டணம் 200 ரூபாய் செலுத்தி வாரியத்தில் உறுப்பினராக இணைந்து அடையாள அட்டை பெறலாம். இந்த அட்டை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும்.உறுப்பினர் பதிவை ஊக்குவிக்கும் வகையில், வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வரை மூன்று மாதங்களில் பதிவு செய்யும் நபர்களுக்கு பதிவு கட்டணம் 200 ரூபாய் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இந்த வாரியத்தில் உறுப்பினராவது தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு காண அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையரகத்தின் (1) 18003093793 (இந்தியாவிற்குள்), (2) 8069009901 (வெளிநாடுகளில் இருந்து தொடர்புக்கு), (3) 8069009900 (தவறிய அழைப்பு மிஸ்டு கால்) ஆகிய கட்டணமில்லா தொலைபேசி சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம்.வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழர்களுக்கான பாதுகாப்பை சட்டப்பூர்வமாக, முறையான இடம்பெயர்வை உறுதி செய்ய முன்பயண புத்தாக்க பயிற்சி, விழுப்புரம் மாவட்டத்தில், கலெக்டர் அலுவலகம் தரைதளத்தில் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.இந்த மையங்களை அணுகினால், அயலக தமிழர்களுக்கான நலத்திட்டங்கள் தொடர்பான விளக்கங்களும், வாரியத்தில் உறுப்பினர் பதிவும் செய்யப்படும் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.