| ADDED : பிப் 12, 2024 06:48 AM
விக்கிரவாண்டி : வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை அமைச்சர் மஸ்தான் திறந்து வைத்தார்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வீடூர் அணை உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 32 அடி (605 மில்லியன் கனஅடி.இந்த ஆண்டு பெய்த மழையால், அணையில் தற்போது 29.175 அடி (398.880 மில்லியன் கன அடி) தண்ணீர் உள்ளது. கடந்த மாதம் 24ம் தேதி, பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக, அணை பாசன ஆயக்கட்டுதாரர்கள் கூட்டம் நடந்தது. அதில், அணையில் தண்ணீர் இருப்புக்கு ஏற்றவாறு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பேரில், அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.அதை தொடர்ந்து, அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீரை அமைச்சர் மஸ்தான் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், 'விவசாயிகள் கோரிக்கையை ஏற்று இன்று முதல் வரும் ஜூன் 24ம் தேதி வரை 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். தமிழ்நாட்டில் 2200 ஏக்கரும், புதுச்சேரி மாநிலத்தில் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெறும்' என்றார்.நிகழ்ச்சியில் மயிலம் எம்.எல்.ஏ., சிவகுமார், ஆயக்கட்டு பாசன சங்க நிர்வாகிகள், வருவாய் துறை அலுவலர்கள், தமிழக மற்றும் புதுச்சேரி பொதுப்பணித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.