உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் மாவட்டத்தில் ஆற்றுத் திருவிழா கோலாகலம்! 25 இடங்களில் கொண்டாட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஆற்றுத் திருவிழா கோலாகலம்! 25 இடங்களில் கொண்டாட்டம்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் 25 இடங்களில் ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆற்றில் நீராடி மகிழ்ந்தனர். ஏராளமான கோவில் உற்சவ மூர்த்திகளின் தீர்த்தவாரியும் நடந்தது.விழுப்புரம் மாவட்டத்தில், தைப் பொங்கல் விழாவின் நிறைவாக ஆற்றுத் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. தென்பெண்ணை ஆற்றில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் பொது மக்கள் குடும்பத்தோடு வந்து, புனித நீராடி, விளையாடி மகிழ்ந்தனர். சுற்றுப்புற கிராமங்களில் இருந்து, கோவில் உற்சவர்கள் ஆற்றுக்கு வந்து தீர்த்தவாரி உற்சவமும் நடந்தது.விழுப்புரம் அடுத்த பிடாகம், அத்தியூர், பேரங்கியூர், எல்லீஸ்சத்திரம், மரகதபுரம், ஏனாதிமங்கலம், பில்லுார், கல்பட்டு, சின்னகள்ளிப்பட்டு, கலிஞ்சிக்குப்பம், அண்டராயநல்லுார், அரகண்டநல்லுார், புதுப்பாளையம், மேட்டுப்பாளையம் தென்பெண்ணையாறுகளிலும், அய்யூர்அகரம் பம்பை ஆறு மற்றும் திண்டிவனம் அடுத்த வீடூர் அணை உட்பட 25 இடங்களில் திருவிழா நடந்தது.விழாவையொட்டி, நேற்று காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஆற்றில் நீராடி உற்சாகம்

இந்தாண்டு பருவமழை பெய்துள்ளதால், தென்பெண்ணை ஆற்றில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் செல்கிறது. இதனால், குடும்பத்தோடு ஆற்றுக்கு வந்த பொது மக்கள் நீராடி மகிழ்ந்தனர்.மேலும், ராட்டினங்கள், விளையாட்டு சாதனங்களில் சிறுவர், சிறுமிகள் விளையாடி மகிழ்ந்தனர். பன்னீர் கரும்புகள், காய்கறிகள், கிழங்குகள், பழங்கள், விளையாட்டு பொருட்கள் விற்பனை ஜோராக நடந்தது.

தீர்த்தவாரி

ஆற்றுத் திருவிழாவையொட்டி அந்தந்த பகுதிகளில் இருந்து உற்சவர் சுவாமிகள் கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

போக்குவரத்து நெரிசல்

விழுப்புரத்தில் இருந்து பிடாகம் மற்றும் சின்னகள்ளிப்பட்டு உள்ளிட்ட ஆற்று திருவிழா பகுதிகளுக்கு, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.விழாவையொட்டி எஸ்.பி., தீபக் சிவாச் மேற்பார்வையில் 700 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சின்னகள்ளிப்பட்டில் கூட்ட நெரிசல் காரணமாக, கோலியனுார் கூட்ரோடு பகுதியில், கனரக வாகனங்கள் மாற்று சாலையில் திருப்பி விடப்பட்டன. திருச்சி நெடுஞ்சாலையில் பிடாகம், பேரங்கியூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், போலீசார் அதனை சீரமைத்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை