உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தனி நபர் ஆக்கிரமிப்பை கண்டித்து கண்டாச்சிபுரத்தில் சாலை மறியல்

தனி நபர் ஆக்கிரமிப்பை கண்டித்து கண்டாச்சிபுரத்தில் சாலை மறியல்

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கண்டாச்சிபுரம் அம்பேத்கர் நகர் மற்றும் பெரிய காலனி பகுதி மக்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இடம் ஒதுக்கப்பட்டு, அங்கு வீடு கட்டி வசித்து வருகின்றனர். வீடு ஒதுக்கப்பட்ட இடங்கள் தவிர மீதமுள்ள 30 சென்டிற்கும் மேற்பட்ட இடம் யாருக்கும் ஒதுக்கப்படாமல் காலியாக உள்ளது. இந்த இடத்தினை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வருவதாக தாலுகா அலுவலகத்தில் பலமுறை அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும், சில வாரங்களுக்கு முன் போராட்டமும் நடத்தினர். நேற்று முன்தினம் இரவு அரசு புறம்போக்கு இடத்தினை அந்த நபர் மணல் மற்றும் கற்களைக் கொட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனையறிந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 11:00 மணியளவில் தாலுகா அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். கண்டாச்சிபுரம் சப் இன்ஸ்பெக்டர் காத்தமுத்து தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி 11:20 மணியளவில் மறியலை கைவிடச் செய்தனர். தொடர்ந்து, தாசில்தார் முத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், விசாரணை நடத்தி தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். அதனையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை