உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மரக்காணத்தில் 3 இடங்களில் சாலை துண்டிப்பு சாலையில் விழுந்த மரங்களால் போக்குவரத்து பாதிப்பு

மரக்காணத்தில் 3 இடங்களில் சாலை துண்டிப்பு சாலையில் விழுந்த மரங்களால் போக்குவரத்து பாதிப்பு

மரக்காணம் : மரக்காணம் பகுதியில் பெஞ்சல் புயலால் 3 இடங்களில் சாலை துண்டிக்கப்பட்டு, 20 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.'பெஞ்சல்' புயல் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்தது. அதையெட்டி மரக்காணம் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று தொடர் கனமழை பெய்தது.பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அனுமந்தையில் இருந்து வண்டிப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள கழுவெளி ஏரியில் வெள்ளம் அதிகரித்தது.இதனால் வண்டிப்பாளையம், கோட்டிக்குப்பம், கிளாப்பாக்கம், ஓமிப்பேர், நடுக்குப்பம் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மரக்காணம் வழியாக 15 கி.மீ., துாரம் சுற்றி புதுச்சேரி செல்கின்றனர். இந்த வழியாக அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மரக்காணம் அடுத்த கானிமேட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி கடந்த இரு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஓங்கூர் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அந்த பகுதியில் போடப்பட்ட தற்காலிக சாலை நீரில் மூழ்கியது.இதனால் கானிமேடு, மண்டகப்பட்டு பகுதியில் உள்ள 5 கிராம மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.அதேபோல் சொரப்பட்டு கிராமத்தில் இருந்து ஆடவல்லிக்கூத்தான் கிராமம் செல்லும் வழியில் இருந்த தரைப்பாலத்தை அகற்றிவிட்டு, மேம்பாலம் கட்டும் பணி கிடப்பில் போட்டதால் அந்த இடத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக சாலையும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.இதனால் சொரப்பட்டு, வங்காரம், காயல்மேடு, காரட்டை உட்பட 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திண்டிவனம், மரக்காணம் செல்ல10 கி.மீ., துாரம் சுற்றி செல்கின்றனர். மரக்காணம் உப்பளம் சாலை, மரக்காணம் புதுச்சேரி சாலையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த பகுதிகள் மற்றும் கூனிமேடுக்குப்பம் புயல் பாதுகாப்பு மையத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மரக்காணத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதை அமைச்சர் பொன்முடி, அரசு முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் முன்னிலையில், கலெக்டர் பழனி தலைமையில் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், லட்சுமணன், சிவா, எஸ்.பி., தீபக் சிவாச், கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், சேர்மன் தயாளன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ