இடமாற்றத்திற்கு ஒத்துழைக்காத ஆளும் கட்சி; முடிவெடுக்க முடியாமல் தவிக்கும் அதிகாரிகள்
செ ஞ்சியில் தேசிய நெடுஞ்சாலையாக உள்ள திருவண்ணாமலை சாலையில் வங்கிகள், மருத்துவமனை, வணிக நிறுவனங்கள் உள்ள நெரிசலான இடத்தில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அந்த இடத்தில் நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்து போவதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களும், வங்கி பணிக்கு வந்து செல்லும் பொது மக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இங்கு பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், பிரசாரம் செய்வதற்கு அரசு தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கேட்டு வருகின்றனர். இந்த பிரச்னை மாவட்ட நிர்வாகம், காவல் துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து சமீபத்தில் செஞ்சியில் அனைத்து கட்சி கூட்டம் தாசில்தார் தலைமையில் நடந்தது. இதில் திருவண்ணாமலை சாலையில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், பிரசாரம் செய்ய அனுமதி கிடையாது, மாற்றாக பீரங்கிமேடு மந்தை வெளி, சிறுகடம்பூர் சந்தை மைதானம், சிங்கவரம் சாலை ஆகிய இடங்களை அரசு தரப்பில் தெரிவித்தனர். இதற்கு மற்ற கட்சிகள் ஒப்புக்கொண்ட நிலையில் ஆளும் கட்சியான தி.மு.க.,வும்., கூட்டணி கட்சியான, காங்., சார்பில் பங்கேற்றவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது இந்த இடத்தில் எதிர்கட்சியாக இருந்த ஸ்டாலின் பேசிய போது கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. சமீபத்தில் எதிர்கட்சி தலைவர் பழனிசாமி வந்தபோதும் இந்த இடத்தில் நெரிசல் ஏற்பட்டது. கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக அரசு முக்கிய தலைவர்களுக்கு தேசிய நெடுஞ்சாலையில் அனுமதி அளிக்காமல் நிராகரித்து வருகிறது. இந்நிலையில் மற்ற கட்சிகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆளும் கட்சி மக்களுக்கு இடையூறாக, நெரிசல் மிகுந்த இடத்தில் தான் கூட்டம் நடத்துவோம் என பிடிவாதம் பிடித்து வருவதால், நிலையான உத்தரவு பிறப்பிக்க முடியாமல் மாவட்ட அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.