உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.6.67 கோடியில் ஸ்கூட்டர்..விநியோகம்: தகுதியுடையோருக்கு உபகரணங்கள் வழங்க ஏற்பாடு

 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.6.67 கோடியில் ஸ்கூட்டர்..விநியோகம்: தகுதியுடையோருக்கு உபகரணங்கள் வழங்க ஏற்பாடு

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளும், சமூகத்தில் சுதந்திரமாகவும், ஏற்றத்தாழ்வின்றி வாழ்ந்திடும் வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளை பாதுகாத்து வருகிறது. அவர்களுக்கான சலுகை திட்டங்களையும் வழங்கி வருகிறது. தற்போது உள்ளாட்சி நியமன பதவிகளையும் வழங்கி மேம்படுத்தியுள்ளது. மாவட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள் குறித்து, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ராஜசேகர் கூறியதாவது: மாவட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை இதுவரை 23 ஆயிரத்து 729 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸ் 3,712 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. பராமரிப்பு உதவி தொகை மாதந்தோறும் 2000 ரூபாய் வீதம், 7,153 பேருக்கு 68.66 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறுந்தொழில் புரிவதற்கான வங்கி கடன் மானியம் 570 பேருக்கு, 99.36 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 3,827 பேருக்கு 25.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கை, கால், ஊன்று கோல்கள், காதொலி கருவி, திறன்பேசி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் போன்ற பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட 656 மாற்றுத் திறனாளிகளுக்கு, 6.67 கோடி ரூபாய் செலவில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இலவச பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, விண்ணப்பிக்கும் தகுதியுடைய பயனாளிகளுக்கும் படிப்படியாக வழங்கப்படும். இதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளி திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 152 பேருக்கு 58.25 லட்சம் ரூபாய் திருமண உதவித்தொகையும், கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், 2,096 மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 1.01 கோடி ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. வாசிப்பாளர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 36 மாணவ, மாணவியர்களுக்கு 1.57 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, உதவி உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ராஜசேகர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ