அமைச்சரை சந்திக்க தயங்கும் மாஜியின் ஆதரவாளர்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் முன்பு பொன்முடி, மஸ்தான் என இரு அமைச்சர்கள் இருந்தனர். இருவரும் இரு துருவங்களாக செயல்பட்டு வந்தனர். இதனால், விழுப்புரம் வடக்கு மாவட்ட பக்கம் வருவதை பொன்முடி தவிர்த்து வந்தார்.தற்போது மஸ்தானின் அமைச்சர் பதவி பறிக்கப்படடதால், மாவட்டத்திற்கு ஒரே ஒரு அமைச்சராக பொன்முடி உள்ளார். அவரை, வடக்கு மாவட்டத்தில் உள்ள அவரது ஆதரவாளர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.அதே சமயத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் மஸ்தான் மூலம் கட்சி பதவி மற்றும் உள்ளாட்சி பதவிகளுக்கு வந்தவர்கள், பொன்முடியை சந்தித்தால், மஸ்தான் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால், பல நிர்வாகிகள் பொன்முடியை சந்திப்பதை தவிர்த்து வருகின்றனர். இதுபற்றி மஸ்தான் ஆதரவாளர்கள் தரப்பில் கேட்ட போது, '' விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சராக கட்சி தலைமையால் பொன்முடி பெயர் அறிவித்த உடன் பார்க்க உள்ளதாக'' தெரிவிக்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தி.மு.க.,வில் யாரும் அமைச்சர் இல்லாததால், ஏ.வ.வேலு பொறுப்பு அமைச்சராக கட்சி தலைமையால் அறிவிக்கப்பட்டார். அதுபோல், விழுப்புரம் வடக்கு மாவட்டத்திற்கு பொன்முடியை பொறுப்பு அமைச்சராக நியமிக்கும் அறிவிப்பு, இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு வெளியாக வாய்ப்பு உள்ளதாக, கூறுகின்றனர்.