டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஆலோசனை கூட்டம்
விழுப்புரம்; விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சரவணன், மாநில பொதுச்செயலாளர் கோதண்டம், மாநில பொருளாளர் ஜெய்கணேஷ் முன்னிலை வகித்தனர். இதில், பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது; டாஸ்மாக் ஊழியர்கள், 22 ஆண்டுகளை கடந்தும், ஊதியம் அதிகபட்சமாக 15 ஆயிரம் ரூபாயை தாண்டவில்லை. தொழிலாளர் நலச்சட்டங்கள் அமல்படுத்தப்படாமல் அனைத்திற்கும் விதிவிலக்கு பெற்று கொத்தடிமைகள்போல தமிழக அரசே நடத்தி வருவது கண்டனத்திற்குரியது. கேரளாவில் வழங்குவது போன்று தமிழகத்திலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும். அரசு வருவாய்க்கு பாடுபடும் டாஸ்மாக் ஊழியர்களை காலி பாட்டில் சேகரிக்க சொல்வதை கண்டித்தும், தொழிலாளர் நல சட்டங்களை அமல்படுத்தாததை கண்டித்தும், டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கக்கோரியும் வரும் 9ம் தேதி சென்னை தலைமை செயலக கோட்டையை டாஸ்மாக் ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது, துணை தலைவர் முருகேசன், மாநில செயலாளர் இளங்கோவன், இணை பொதுச்செயலாளர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.