| ADDED : அக் 13, 2025 06:39 AM
விழுப்புரம்; ஆதிதிராவிடர் நலத்துறையில் ஆசிரியர் காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன என, அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார். விழுப்புரம், வழுதரெட்டியில் கட்டப்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலை பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணியை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று ஆய்வு செய்தார். அப் போது அவர் கூறியதாவது: ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சியில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், விடுதிகள் கட்டப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் உள்பட, அங்குள்ள கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படுகிறது. இந்த துறைக்கு கூடுதல் நிதியை முதல்வர் ஸ்டாலின் வழங்கியதோடு, தனி கவனம் செலுத்தி பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான வசதிகளை செய்து தந்துள்ளார். கற்றல் கற்பித்தல் அறை, கிச்சன், டைனிங் அறை, உள்விளையாட்டு அரங்கு, வைபை ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த துறையில் ஆசிரியர் காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகிறது. தெருக்களில் உள்ள ஜாதி பெயர்களின் மாற்றம் என்பதே சமூக நீதியின் புரட்சி தான். இவ்வாறு தெரிவித்தார். நிகழ்ச்சியில், லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.