| ADDED : பிப் 04, 2024 04:44 AM
திண்டிவனம் : ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் இடத்தை மீட்கக் கோரி கிராம மக்கள் சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.திண்டிவனம் அடுத்த ஏப்பாக்கம் கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் எல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உண்டியல் வைப்பது தொடர்பாக ஊராட்சி தலைவர் பாபு தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் பிரச்னை இருந்து வந்தது.இந்நிலையில், இந்து அறநிலையத் துறைக்குத் தெரியாமல் உண்டியல் வைத்ததால், துறை சார்பில் உண்டியலுக்கு சீல் வைக்கப்பட்டது.மேலும், கோவில் நுழைவு வாயிலில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், அறநிலையத்துறை சார்பில் 'க்யூஆர்' கோடு வைக்கப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தது காரணமாக ஒலக்கூர் போலீசார் மூலம் அது அகற்றப்பட்டது.இந்நிலையில் ஊராட்சி தலைவர் பாபு தலைமையில் நேற்று காலை 11:00 மணியளவில், திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனை மீட்டு கிராம மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், தாசில்தார் சிவா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதற்கு அதிகாரிகள், ஆக்கிரமிப்பு இடங்களை அளந்த பிறகு, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.