உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாவட்டத்தில் நெல், கரும்பு சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு! மேலும் அதிகரிக்க வேளாண் துறை தீவிரம்

மாவட்டத்தில் நெல், கரும்பு சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு! மேலும் அதிகரிக்க வேளாண் துறை தீவிரம்

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 12 ஆயிரம் எக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி அதிகரித்துள்ளது.விழுப்புரம் மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டுள்ளது. பெரும்பாலான விவசாயிகள் நெல், கரும்பு சாகுபடிகளை செய்து வருகின்றனர். இங்கு சாகுபடியாகும் நெல் மூட்டைகள் வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.மாவட்டத்தில், வேளாண் அலுவலகத்தில் 1 லட்சத்து 98 ஆயிரம் விவசாயிகள் பதிவு செய்து, அரசு வழங்கும் மானியம் மூலம் வேளாண் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.கோலியனுார், கண்டமங்கலம், காணை, விக்கிரவாண்டி, வானுார், மரக்காணம், மயிலம், ஒலக்கூர், செஞ்சி, வல்லம், மேல்மலையனுார், முகையூர், திருவெண்ணெய்நல்லுார் ஆகிய 13 தாலுகாக்களில் உள்ள இந்த விவசாயிகள் தங்களின் நிலங்களில் நெல், திருந்திய நெல், கரும்பு, சோளம், கம்பு, ராகி, திணை, வரகு, சாமை, தீவன சோளம், மொச்சை பயறு, எண்ணெய் வித்துக்கள், பருத்தி உள்ளிட்டவைகளை சாகுபடி செய்து வருகின்றனர்.வேளாண் துறை மூலம் ஆண்டுதோறும் விவசாய சாகுபடி குறித்து மார்ச் மாதம் முதல் பிப்வரி மாதம் வரை கணக்கெடுக்கப்படும்.அதன்படி கடந்த 2020-21ம் ஆண்டு முதல் இந்தாண்டு தற்போது வரை நெல் சாகுபடியை அதிகளவு செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடந்த 2021ம் ஆண்டு மாவட்டத்தில் 1 லட்சத்து 1,658.4 எக்டர் பரப்பளவு நெல் சாகுபடி செய்தனர். தொடர்ந்து, 2022ம் ஆண்டு 1 லட்சத்து 16 ஆயிரத்து 930.2 எக்டர், 2023ம் ஆண்டு 1 லட்சத்து 28 ஆயிரத்து 930.2 எக்டர் சாகுபடி செய்துள்ளனர்.2024ம் ஆண்டு பெஞ்சல் புயலால் 92 ஆயிரத்து 505.65 எக்டர் பரப்பளவாக குறைந்தது. இந்தாண்டு கடந்த மார்ச் முதல் தற்போது மே மாதம் வரை 3 மாதத்திலேயே 1 லட்சத்து 1,443.3 எக்டர் பரப்பளவு நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 9 மாதங்களில் கூடுதலாக சாகுபடி பரப்பளவு அதிகரிக்க வாயப்பு உள்ளது.இதன் மூலம் மாவட்டத்தில் கணிசமாக நெல் சாகுபடி செய்யும் விவசாய நிலங்களின் பரப்பளவு உயர்ந்து வருகிறது.இதையடுத்து, கரும்பு சாகுபடி கடந்த 2021ம் ஆண்டு முதல் தற்போது வரை 10 ஆயிரத்து 620.59 எக்டர் பரப்பளவில் இருந்து சராசரியாக ஆண்டிற்கு 2 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவு கூடி கொண்டு செல்கிறது.இந்தாண்டு, தற்போது வரை 12 ஆயிரத்து 244.64 எக்டர் பரப்பளவு கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.நெல், கரும்பு சாகுபடி போல் சிறு தானிய பயிர்களும், எண்ணெய் வித்துக்களையும் விவசாயிகள் கணிசமாக சாகுபடி செய்து வருகின்றனர். விவசாய சாகுபடியை மேலும் அதிகரிக்க வேளாண் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், 'மாவட்டத்தில் விவசாயிகளுக்கு, வேளாண் சாகுபடிக்கான போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். நெல் சாகுபடி குறித்தும், இதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் பயன்கள் குறித்தும் விழிப்புணர்வு செய்ததால் தான் சாகுபடியின் பரப்பளவு உயர்ந்துள்ளது.வேளாண் சாகுபடி பற்றி தெரியாத விவசாயிகளுக்கு, அவர்களின் நிலங்களில் மண் தரத்தை ஆய்வு செய்து, அங்கு என்ன பயிர் விதைக்க வேண்டும் என அறிவுரை கூறுவதோடு, அந்த பயிரை விவசாயி சாகுபடி செய்த பின் நிலத்திற்கு சென்று கள ஆய்வும் செய்தும் வருகிறோம். இன்னும் கூடுதலாக சாகுபடி பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றனர்.- அய்யனார்,தென்னிந்திய நதிகள் இணைப்புவிவசாயிகள் சங்க மாநில செயலாளர்.

வழங்கினால் போதும்

தமிழகத்தில் நெல் சாகுபடி பரப்பளவு விழுப்புரம் மாவட்டத்தில் அதிகமாக உள்ளது. நெல் குவிண்டாலுக்கு மத்திய அரசு கேரளா, ஆந்திரா மாநிலங்களில் 4,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் குவிண்டாலுக்கு 2,369 ரூபாய் தான் வழங்கப்படுகிறது. தமிழக அரசு, மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் நெல் குவிண்டால் விலையை இங்கு பெற்று தந்தால் விவசாயிகள் மேலும் கூடுதலாக நெல் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டுவர்.- சீனுவாசன், விவசாயி, புதுக்குப்பம்.

நிலையம் கூடுதலாக வேண்டும்

நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் மார்கெட் கமிட்டியில் நெல் மூட்டைகளை விற்றால் அதிகபட்சமாக 1,300 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்றால்தான் மத்திய அரசின் விலை கிடைக்கிறது. ஊராட்சிக்கு ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை துவங்க வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்துள்ளோம். விரைவில் துவங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை