| ADDED : நவ 27, 2025 04:58 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் சிலம்பம் தற்காப்பு கலை மாநில, தேசிய போட்டிகளில் தொழிலாளியின் மகள் சந்தியாஸ்ரீ வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். விழுப்புரம், காகுப்பம் மே ட்டு தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன். வெல்டிங் தொழிலாளி. இவர் மனைவி தேன்மொழி. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இவர்களின் இளைய மகள் சந்தியாஸ்ரீ. இவர், விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு பயில்கிறார். மாணவி சந்தியாஸ்ரீ சிலம்பம் விளையாட்டில் பல சாதனைகளை படைத்து, பெற்றோருக்கும், பள்ளிக்கும் பெருமையை சேர்த்துள்ளார். இவர், விழுப்புரம் மாவட்ட டி.என்.ஆர்.எஸ்., அன்பு சிலம்பம் மற்றும் கராத்தே அறக்கட்டளையில் சேர்ந்து பயிற்சியாளர் அன்பரசியிடம், கடந்த ஐந்தாண்டுகளாக சிலம்பம் பயிற்சியை கற்று வருகிறார். மாணவி சந்தியாஸ்ரீ சிலம்பத்தில் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, சுருள்வாள், மான்கொம்பு, தீச்சிலம்பம் ஆகியவற்றில் நன்றாக பயிற்சி பெற்றதோடு, மாவட்ட, மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவி சந்தியாஸ்ரீ ஒரு மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி ராயல் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். மேலும், அரசு பள்ளிக்கல்வி துறை சார்பில் நடந்த மாவட்ட சிலம்பம் போட்டியில், மாணவி சந்தியாஸ்ரீ பங்கேற்று, 2 மற்றும் 3வது இடங்களை பிடித்து வென்றார். மாணவி சந்தியாஸ்ரீ கூறியதாவது, சிலம்பம் விளையாட்டிற்கு தொடர்ந்து பயிற்சி எடுப்பதால் என் உடல்நிலை புத்துணர்ச்சி பெற்று மனவலிமைக்கு தைரியத்தை தருகிறது. பெண்களுக்கு சிலம்பம் மிகவும் சிறந்த தற்காப்பு கலையாகும். அனைத்து பெண்களும் இந்த தற்காப்பு கலையை அவசியம் கற்று கொள்வது நல்லது என தெரிவித்தார்.