உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆரோவில்லில் ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றதால் பரபரப்பு

ஆரோவில்லில் ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றதால் பரபரப்பு

வானுார் : ஆரோவில் பகுதியில் ஆக்கிரமிப்பு இடத்தை அகற்ற சென்ற வருவாய்த்துறை அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.சர்வதேச நகரமான ஆரோவில் பகுதியில் கிரவுன் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக இப்பகுதியில் உள்ள மரங்களை வெட்ட ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், கோர்ட் உத்தரவின்படி கிரவுன் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், ஆரோவில் 'ஆரோமோட்' கட்டடம் கட்டுப்பட்டுள்ள இடம், வண்டிப்பாதையில் இருப்பதாக, புதுச்சேரி மாநிலம் ஆலங்குப்பத்தை சேர்ந்த சூர்யா என்பவர், கடந்த 2021ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி, வருவாய்த்துறையினர் முன்னிலையில், இடத்தை அளவிட உத்தரவிட்டார். அதன்பேரில் வருவாய்துறையினர் அளவீடு செய்ததில் அரசு இடத்தில் 5,600 சதுர அடியை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியிருப்பது தெரிய வந்தது. இந்த ஆக்கிரமிப்பை வருவாய் துறையினர் அகற்ற முயன்றபோது ஆரோவில் நிர்வாகம் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று 7ம் தேதி கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வருவதால், தாசில்தார் நாராயணமூர்த்தி, வானுார் பி.டி.ஓ., தேவதாஸ் மற்றும் அதிகாரிகள் நேற்று, ஆரோவில்லில் கட்டப்பட்ட 'ஆரோமோட்' கட்டடத்தின் ஆக்கிரமிப்பு பகுதிகளை இடிக்கத் துவங்கினர்.அப்போது அங்கு வந்த ஆரோவில் நிர்வாகத்தினர், இடத்தை இடிக்க கோர்ட்டில் தடை ஆணை பெற்றதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றம் பணியை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !