| ADDED : ஜன 06, 2024 05:06 AM
திண்டிவனம : திண்டிவனம் பழைய கோர்ட்ட வளாகத்தில் இருந்த வழக்கறிஞர் ஓய்வறை போலீசார் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திண்டிவனம் நேரு வீதியில் இருந்த ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் அனைத்தும் கடந்த 2017 ம் ஆண்டு, ஜக்காம்பேட்டையில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.இந்நிலையில், பழைய கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர்கள் பயன்படுத்தி வந்த ஓய்வறை பூட்டப்பட்டு, ஐகோர்ட் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. ஓய்வறையை பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில், சிலர் அத்துமீறி ஓய்வறையை பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், ஓய்வறையில் தொடர்ந்து வழக்கறிஞர்கள் அஜீஸ், ராஜசேகர் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன் சக வழக்கறிஞர் ஒருவரால் தாக்கப்பட்டு,காயமடைந்தனர். இது குறித்து திண்டிவனம் டவுன் போலீசில் தாக்குதல் நடத்திய வழக்கறிஞர் ஒருவர் மீது இரண்டு எப்.ஐ.ஆர். போடப்பட்டது.தொடர்ந்து ஓய்வறையில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம், திண்டிவனம் டவுன் போலீஸ் மூலம் நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல் திண்டிவனம் வழக்கறிஞர் சங்க தலைவர் சண்முகம், டவுன் போலீஸ் நிலையத்தில் வழக்கறிஞர் ஓய்வறையில் அடிக்கடி நடக்கும் மோதல் சம்பவங்களை தடுக்கும் வகையில், ஓய்வறையை பூட்டி சீல் வைக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்திருந்தார்.இந்நிலையில் இந்த பிரச்னை குறித்து, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி அறிவுரையின் பேரில், ஓய்வறையை பூட்டி திண்டிவனம் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதியின் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று உத்தரவானது.இதன் பேரில், கோர்ட் ஊழியர்கள் நேற்று மாலை 5.30 மணியளவில், பிரச்னைக்குரிய வழக்கறிஞர் ஓய்வறையை, திண்டிவனம் டவுன் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி உள்ளிட்ட போலீசார் பாதுகாப்புடன் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் திண்டிவனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.