புதிய பாலம் கட்டுவதற்கு தடையாக இருந்த ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம் திண்டிவனம் நகராட்சி நடவடிக்கை
திண்டிவனம் : திண்டிவனத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்திற்கு இடைஞ்சலாக இருந்த ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. திண்டிவனம், கிடங்கல் பகுதியில் இருந்த தரைப்பாலம், 'பெஞ்சல்' புயலின் போது, அடியோடு அடித்து செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து நகராட்சி சார்பில், 1.32 கோடி ரூபாய் செலவில் உயர் மட்ட பாலம் கட்டுவதற்கான பணி கடந்த மார்ச் 16ம் தேதி துவங்கியது. பாலம் கட்டும் பகுதியில் இரு பக்கமும் ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் இருந்ததால், பணிகள் நிறைவு பெறவில்லை. தொடர்ந்து பாலத்திற்கு பக்கவாட்டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்திலிருந்த ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் அகற்றுவது தொடர்பாக, சம்பந்தபட்டவர்களுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் விடப்பட்டும், காலி செய்யவில்லை. மாற்று இடம் வழங்கினால் காலி செய்வதாக கூறியதால், பாலம் கட்டும் பணி தடைபட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலை 10:00 மணியளவில், நகராட்சி பொறியாளர் சரோஜா, நகரமைப்பு அலுவலர் திலகவதி, வி.ஏ.ஓ.பிரபாகரன் மேற்பார்வையில், டவுன் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் துணையுடன் ஆக்கிரமிப்பு பகுதிகள் பொக்லைன் மூலம் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு பகுதியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் சுசிலா, 78; என்பவர் வீட்டிற்குள் மண்ணெண்ணெய் கேனுடன் உட்கார்ந்து கொண்டு, தனக்கு மாற்று இடம் தரும் வரை வீட்டைவிட்டு வெளியே வரமாட்டேன் என்று தர்ணா நடத்தினர். பின்னர் வருவாய்த்துறை மற்றும் போலீசார் மூதாட்டியிடம், மாற்று இடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர். தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.