| ADDED : நவ 28, 2025 05:09 AM
விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு தயாரிப்பாளர்களுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது. விக்கிரவாண்டி அடுத்த சித்தணியில் நெடுஞ்சாலை உணவகத்தில், நடந்த முகாமிற்கு, மாநில ஆணையர் லால் வேனா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இது குறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், 'உணவு பாதுகாப்புத் துறை சார்பில் உணவு தயாரிப்பவர்களுக்கு தொற்று பரவாமல் இருக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தியும், உணவு தயாரிக்கும் இடங்களிலே நேரடியாக சென்று பாதுகாப்பாக உணவு தயாரிக்க நேரடி பயிற்சி அளிக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 1100 பேருக்கு இதுவரை தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். அதே போன்று 3400 பேருக்கு நேரடியாக நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது' என்றார். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் டாக்டர் ரஞ்சிதா, சுரேந்தர், ஜெகதீஸ்வரன், கற்பகம், கொளஞ்சி உள்ளிட்ட ஓட்டல் ஊழியர்கள் பங்கேற்றனர்.