உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மானியத்தில் காய்கறி, பழ விற்பனை வண்டி... விநியோகம் ;ரூ.1.23 கோடியில் 410 பேருக்கு வழங்கல்

மானியத்தில் காய்கறி, பழ விற்பனை வண்டி... விநியோகம் ;ரூ.1.23 கோடியில் 410 பேருக்கு வழங்கல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் மானியத்தில் தலா 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 410 விவசாய தொழிலாளர்களுக்கு, நடமாடும் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில், விவசாயிகளுக்கு மானிய கருவிகள், இடுபொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன், காய்கறிகள், பழங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை, விவசாய தொழிலாளர்கள் தங்களின் கிராமங்கள், நகர பகுதியின் அருகிலேயே விற்பனை செய்ய வசதியாக, தற்போது நடமாடும் காய்கறி, கனிகள் விற்பனை வண்டிகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில், கோலியனுார் தாலுகாவில் 50 விவசாய தொழிலாளர்களுக்கும், காணை தாலுகாவில் 27 பேருக்கும், கண்டமங்கலம் தாலுகாவில் 29 பேருக்கும், விக்கிரவாண்டி தாலுகாவில் 23, வானுார் தாலுகாவில் 31, செஞ்சி தாலுகாவில் 37, வல்லம் தாலுகாவில் 25, மேல்மலையனுார் தாலுகாவில் 31, மரக்காணம் தாலுகாவில் 40, மயிலம் தாலுகாவில் 32, ஒலக்கூர் தாலுகாவில் 26, முகையூர் தாலுகாவில் 25 மற்றும் திருவெண்ணெய்நல்லுார் தாலுகாவில் 34 பேருக்கும் என மொத்தம் 410 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 61.50 லட்சம் ரூபாய் மானியத்துடன் 1.23 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இந்த நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகள் வழங்ப்பட்டுள்ளது. இந்த நடமாடும் காய்கறி விற்பனை நிலையங்கள் மூலம் விவசாயிகள் விற்பனை செய்வதால், நிலையான வருமானம் கிடைப்பது மற்றும் உள்ளுர் காய்கறிகள் வீணாகாமல் சந்தையை அடைவது போன்ற பலன் உள்ளது. மேலும், இடைத்தரகர்கள் இன்றி காய்கறிகள் குறைந்த விலையில் பொதுமக்களுக்க கிடைக்கவும், புதிய மற்றும் பசுமையான காய்கறிகளை நேரடியாகப் பெற முடிகிறது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நிலையான வருமான வாய்ப்பை வழங்குகிறது. விளைவிக்கப்பட்ட காய்கறிகளை சந்தைக்கு எளிதாக கொண்டு செல்ல உதவுகிறது. உள்ளுரில் விளைந்த காய்கறிகள் வீணாகாமல் தடுக்க உதவுகிறது. இதன் மூலம் உள்ளுர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன் உள்ளுர் விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். அவர்களின் உற்பத்திக்கு நல்ல சந்தையை உருவாக்குகிறது என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில், தொடர்ந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால், விருப்பமுள்ள விவசாயிகள் தோட்டக்கலை துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து, வரும் ஆண்டுகளில் முன்னுரிமை அடிப்படையில் பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்