| ADDED : பிப் 06, 2024 06:15 AM
விக்கிரவாண்டி : விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தொடரும் வாகன திருட்டால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தினமும் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமானோர் புற நோயாளிகளாகவும், உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருபவர்கள், பார்வையாளர்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களை மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவு எதிரேயும், அவசர சிகிச்சை பிரிவு அருகில் உள்ள பகுதியிலும், காத்திருப்போர் கூடத்தின் அருகிலும், மருத்துவ மனையின் வெளிப்புற பகுதிகளில் நிறுத்தி விட்டு மருத்துவமனைக்குள் சென்று வருகின்றனர்.திரும்பி வந்து பார்க்கும் போது பைக் திருடு போயிருப்பது தெரிகிறது. தினமும் இரண்டு பைக்குகளாவது காணாமல் போவது வாடிக்கையாகி விட்டது. மருத்துவமனை நிர்வாகம், ஊராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை சமூக விரோதிகள் சேதப்படுத்தி விடுவதால் போலீசார் குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியாமல் திணறுகின்றனர்.பொதுமக்கள் நலன் கருதி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக பாதுகாப்பான நிறுத்துமிடம் அமைத்து வாகனங்களுக்கு டோக்கன் கொடுத்து வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.அல்லது தனியார் நிறுவனத்திடம் பைக்குகள் நிறுத்துமிடம் அமைத்து கட்டண வசூல் முறையோ ஏற்படுத்தினால் வாகன திருட்டு முற்றிலும் தவிர்க்கப்படும்.இதற்கு மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.