அரசு பள்ளி இடத்தை வெளி நபர்களுக்கு பட்டா வழங்க கிராம மக்கள் எதிர்ப்பு
விழுப்புரம் : செங்கமேடு கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு சொந்தமான பொது இடத்தை வெளி நபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து ஊராட்சி தலைவர் கலியபெருமாள் தலைமையில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:செங்கமேடு கிராமத்தில், அரசு தொடக்க பள்ளி கட்டடம் குடியிருப்பு பகுதியில் சிறிய இடத்தில் உள்ளது. பள்ளி மாணவர்கள் விளையாடுவதற்கு போதிய இடமில்லை. இந்நிலையில், கடந்த 14ம் தேதி விக்கிரவாண்டி தாலுகா அலுவலர்கள், பள்ளிக்கூடம் எதிரே உள்ள சிறிய பொது காலி இடத்தில், வெளியூரைச் சேர்ந்த சிலருக்கு இலவச பட்டா வழங்க இடம் தேர்வு செய்து சென்றனர்.பொது இடத்தையும் இலவச மனைப்பட்டாவாக வழங்க கூடாது என மக்களுடன் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்ததோம். கிராமத்தில் புதிய புதிய மனை பிரிவுகள் உருவாகி மக்கள் தொகை அதிகரித்து, பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. ஆரம்ப பள்ளி தரம் உயர்த்தி, உயர்நிலைப் பள்ளியாக கட்ட வேண்டிய நிலை உருவாகும். அப்போது, அரசு பள்ளிக்கு கட்டடம் கட்ட போதுமான இடம் இல்லாத நிலை உருவாகும். மேலும், சிறிய பொது இடம் பொங்கல் விழாவில், மாடு விரட்டும் நிகழ்ச்சிக்கு மந்தகரையாக பயன்படுத்தி வருகிறோம். இதனால் பள்ளி அருகில் உள்ள இடத்தை வெளிநபர்களுக்கு மனைப்பட்டா வழங்கும் முடிவை கைவிட்டு வேறு இடம் தேர்வு செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.