உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 21ம் தேதி முதல் விழுப்புரம் - புதுச்சேரி சாலை மூடல் மாற்று வழியில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு

21ம் தேதி முதல் விழுப்புரம் - புதுச்சேரி சாலை மூடல் மாற்று வழியில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பால பணி தொடங்குவதால், வரும் 21ம் தேதி முதல் விழுப்புரம் - புதுச்சேரி சாலை மூடப்பட்டு, மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்படுகிறது.விழுப்புரம் - நாகப்பட்டினம் (182 கி.மீ) இடையே நடந்து வரும் புதிய நான்கு வழிச்சாலை திட்டத்தில், முதல் கட்டமாக, விழுப்புரம் - புதுச்சேரி எம்.என்.குப்பம் (29 கி.மீ) வரை, ஜானகிபுரம் - வளவனுார் இடையே புதிய பைபாஸ் திட்டத்துடன், சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதில், வளவனுார் பைபாஸ் இணைப்பு பாலம், கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் மட்டும் முடிக்கப்படாமல் மெத்தனமாக நடந்து வருகிறது.

கண்டமங்கலம் ரயில்வே பாலம்

கண்டமங்கலம் ரயில்வே பாலத்துக்கான இணைப்பு சாலைகள், இருபுறமும் முடிந்து தயாராக உள்ளது. ரயில்வே துறை அனுமதி பெற்று, கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து, பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. 650 மீட்டர் நீளத்திலும், 50 மீட்டர் அகலத்திலும், இந்த பாலம் முழுதும், பிரமாண்ட இரும்பு பாலமாக அமைக்கப்படுகிறது.கண்டமங்கலத்தில் முதல் கட்டமாக இடதுபுற சாலைக்கான பாலம் அமைக்கும் பணி தொடங்கி, அதற்காக சின்ன பாபுசமுத்திரம் சாலை மட்டும் மூடப்பட்டது. அங்கு இரும்பு பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் 2 மாதமாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.கீழுள்ள கான்கிரீட் பாலத்தின் பக்கவாட்டு பகுதியில், இரும்பு பாலம் பொருத்தும் பணிகள் முடிந்து, ராட்சத கிரேன் உதவியுடன் 'பவுஸ்டிங் கர்டர்' இரும்பு பாலம் கட்டப்பட்டு, இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகிறது. சில தினங்களில் அந்த பணி முடிக்கப்பட்டு, பிறகு, சாலை மார்க்கமாக பிரம்மாண்ட இரும்பு பாலம் நகர்த்தி வைக்கப்படும்.இதனையடுத்து, வலது புறத்தில் இரும்பு பாலம் கட்டும் பணிகள் தொடங்க உள்ளது. இதனால், புதுச்சேரி - விழுப்புரம் மார்க்கத்தில் தற்போது, ரயில்வே கேட் பகுதியில் வாகனங்கள் சென்று வருவது முழுதும் நிறுத்தப்பட உள்ளது.அங்கு வலதுபுறமும் பாலம் அமைக்கும் பணி தொடங்குவதால், வரும் 21ம் தேதி முதல், புதுச்சேரி-விழுப்புரம் மார்க்கம் முழுவதும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது.இது குறித்து, நகாய் திட்ட அலுவலக செய்திக்குறிப்பு:விழுப்புரம் - நாகை நான்கு வழிச் சாலைப் பணி வேகமாக நடந்து வரும் நிலையில், கண்டமங்கலம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால், வரும் 21ம் தேதி முதல் அந்த வழியாக வாகனங்கள், பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்படும். இதனால், மாற்றுப்பாதை அமைக்கப்படுகிறது.விழுப்புரத்திலிருந்து வரும் வாகனங்கள் கலிதீர்த்தால்குப்பம், குச்சிப்பாளையம், பி.எஸ்.பாளையம், வாதானுார், சோரப்பட்டு, செல்லிப்பட்டு, பத்துக்கண்ணு, வில்லியனுார் வழியாக புதுச்சேரி செல்லலாம்.புதுச்சேரியிலிருந்து வரும் வாகனங்கள் சிவராந்தகம், கீழூர், மிட்டாமண்டகப்பட்டு, பள்ளிநேலியனுார், திருபுவனை பாளையம், திருபுவனை வழியாக விழுப்புரம் செல்லலாம்.விழுப்புரம் - புதுச்சேரி மார்க்க பைக், கார்களுக்கான வழித்தடம் திருவண்டார்கோவில், கொத்தம்புரிநத்தம், வனத்தம்பாளையம், ரஜபுத்திரபாளையம், சின்ன பாபுசமுத்திரம், கெண்டியாங்குப்பம், பங்கூர் வழியாக புதுச்சேரி செல்லலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்