மாற்றுத்திறன் பிள்ளைகளுக்கு கிடைத்தது பராமரிப்பு தொகை விழுப்புரம் கலெக்டர் உடனடி நடவடிக்கை
விழுப்புரம் : விழுப்புரத்தில் உதவித் தொகை நிறுத்தப்பட்டதால், மாற்றுத் திறனாளி மகனை பெட்டியில் துாக்கி வந்து தொழிலாளி மனு அளித்த சம்பவத்தில், கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார்.விக்கிரவாண்டி அடுத்த மேல்காரணை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். கூலித் தொழிலாளி. இவருக்கு மகன் கோவிந்தன், 26; மகள் புவனேஸ்வரி, 24; என 2 பிள்ளைகள் உள்ளனர். இருவரும் மாற்றுத் திறனாளிகள். இருவருக்கும் அரசு வழங்கிய மாதாந்திர உதவித் தொகை கடந்த 6 மாதங்களாக திடீரென நிறுத்தப்பட்டது.அதனை மீண்டும் வழங்கக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில் நேற்று முன்தினம் கை, கால்கள் செயல்படாத மாற்றுத் திறனாளியான தனது மகன் கோவிந்தனை, காய்கறி பெட்டியில் வைத்து துாக்கி வந்து, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.இது குறித்து, உடனடியாக விசாரித்து, விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேற்று நடவடிக்கை எடுத்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், 'இந்த இரு மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கும், அவர்களது தந்தை வெங்கடேசனின், இணைப்பு வங்கி கணக்கு எண்ணிற்கு, அரசின் பராமரிப்பு உதவித்தொகை செலுத்தப்பட்டு வந்துள்ளது.அதன்படி, மாதாந்திர உதவித்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வந்துள்ளது. அவர்களுக்கு ஆதார் அட்டை பதிவு இல்லாததால், புவனேஸ்வரிக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதலும், கோவிந்தனுக்கு கடந்த நவம்பர் மாதம் வரை உதவித் தொகையானது, செலுத்தி திரும்ப பெறப்பட்டுள்ளது.இது தொடர்பாக, சென்னை மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்திற்கு, உரிய தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த இருவருக்கும், தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை உடனே வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்றார்.மேலும், அவர்களது கோரிக்கை ஏற்று, உடனடியாக தலா 6,000 ரூபாய் வீதம், மொத்தம் 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை நிலுவை வழங்கப்படுகிறது.இருவருக்கும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை தடையின்றி தொடர்ந்து வழங்கவும், ஆதார் பதிவு மேற்கொள்ளவும் கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.