உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சமூக விரோதிகள் மீது குண்டர் சட்டம் பாயும் : விழுப்புரம் எஸ்.பி., தினகரன் பேட்டி

சமூக விரோதிகள் மீது குண்டர் சட்டம் பாயும் : விழுப்புரம் எஸ்.பி., தினகரன் பேட்டி

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென எஸ்.பி., தினகரன் கூறினார்.விழுப்புரம் எஸ்.பி.,யாக இருந்த சேவியர் தன்ராஜ் திருவாரூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். அங்கிருந்த எஸ்.பி., தினகரன் விழுப்புரம் எஸ்.பி., யாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து நேற்று விழுப்புரம் எஸ்.பி., அலுவலகம் வந்த எஸ்.பி., தினகரன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஏ.டி.எஸ்.பி., பெருமாள், டி.எஸ்.பி.,க்கள் சேகர், பாண்டியன், தனி பிரிவு இன்ஸ்பெக்டர் குமார் வாழ்த்து தெரிவித்தனர்.விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த எஸ்.பி., தினகரன், கடந்த 98ம் ஆண்டு ஐ.பி.எஸ்., ஆக தேர்வு செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஏ.எஸ்.பி.,யாக பணியாற்றினார். இதன் பின் கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் எஸ்.பி.,யாக பணியாற்றி வந்தார். கடைசியாக திருவாரூரில் பணியாற்றி வந்த இவர் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.புதியதாக பொறுப்பேற்ற எஸ்.பி., தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது : விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பாதுகாக்கப்படும். சமூகத்திற்கு தீங்கிழைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு சாராயம் இல்லாத மாவட்டமாக மாற்றப்படுவதோடு, சமூக விரோதிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.மாவட்டத்தில் நிலவும் போக்குவரத்துப் பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். எந்த நேரத்திலும் பொதுமக்கள் நேரில் சந்தித்து புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு எஸ்.பி.,தினகரன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை